அடுத்த மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கூடுதலாக வெளியிட்ட 3,000 டிக்கெட்டும் காலி: சில மணி நேரத்தில் விற்று தீர்ந்தது

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திராவில் கொரோனா தொற்று 2 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 30ம் தேதி  வரையில் தினமும் 5 ஆயிரம் டிக்கெட்டுகள் என வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை தினமும் 3 ஆயிரம் டிக்கெட்டுகள் கூடுதலாக விற்பனை செய்ய தேவஸ்தானம் நேற்று முடிவு செய்துள்ளது. இதற்காக, நேற்று காலை 11 மணி முதல் தேவஸ்தான இணையதளமான www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையத்தில் இந்த டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. டிக்கெட் வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில் சர்வர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, 3 மணியளவில் டிக்கெட் வெளியிடப்பட்டது. அடுத்த சில மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது. மேலும், ஆகஸ்ட் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை வருடாந்திர பவித்ர உற்சவம் நடைபெறுகிறது. இதனால், இந்த 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: