கொரோனா தினசரி பாதிப்பு 43,000க்கு மேல் மீண்டும் உயர்வு: 3ம் அலைக்கான எச்சரிக்கையா?

புதுடெல்லி: கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 43 ஆயிரத்துக்கு மேல் நேற்று அதிகரித்தது. இது, 3ம் அலைக்கான எச்சரிக்கைஎன நிபுணர்கள் கூறி உள்ளனர். கொரோனா 2ம் அலையில் தினசரி பாதிப்பு 4 லட்சம் வரை எகிறிய நிலையில், கடந்த ஒரு மாதமாக பாதிப்பு படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம், 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு 30 ஆயிரத்துக்கு கீழ் தினசரி பாதிப்பு குறைந்தது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கையை ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. இதில், தினசரி பாதிப்பு மீண்டும் 43,000க்கும் உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரத்து 645 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 84 ஆயிரத்து 605 ஆக அதிகரித்துள்ளது. இதே போல், நேற்று ஒரே நாளில் 640 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 22 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவார் எண்ணிக்கை 3 லட்சத்து 99 ஆயிரத்து 436 ஆக உள்ளது. அதாவது, கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 1,336 பேர் அதிகரித்துள்ளனர். ஏற்கனவே, செப்டம்பர் அல்லது அக்டோபரில் இந்தியாவில் 3ம் அலை ஏற்படக் கூடும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றரன். தற்போது, தினசரி பாதிப்பில் நேற்று திடீர் உயர்வு ஏற்பட்டதற்கு, பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. எனவே, இதை 3ம் அலைக்கான எச்சரிக்கையாக கருதி, கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மக்கள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டுமென நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

* இந்தியாவுக்கு சென்றால் 3 ஆண்டு பயண தடை

இந்தியாவுக்கு சென்று வந்தால் 3 ஆண்டு பயண தடை விதிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா கட்டுக்குள் வராத இந்தியா உள்ளிட்ட நாடுகளை சவுதி அரேபியா சிகப்பு பட்டியலில் வைத்துள்ளது. இப்பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சிவப்பு பட்டியல் நாடுகளுக்கு நேரடியாகவோ அல்லது வேறு வழியாகவோ சென்று வந்தால், அவர்களுக்கு 3 ஆண்டுகள் வெளிநாடு செல்ல தடை விதிப்பதோடு, அதிகப்படியான அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

* கோவிஷீல்டு போட்டால் ரத்தம் உறையுமா?

அஸ்ட்ரஜெனிகா மருந்து நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி (இந்தியாவில் கோவிஷீல்டு என பெயரிடப்பட்டுள்ளது) போட்டால் ரத்தம் உறைதல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து பல நாடுகள் அந்த தடுப்பூசியை பயன்படுத்த இடைக்கால தடை விதித்துள்ளன. இந்நிலையில், லான்செட் மருத்துவ இதழில் வெளியான ஆய்வு முடிவு ஒன்றில், ‘2 டோஸ் அஸ்ட்ரஜெனிகா தடுப்பூசி போட்ட பிறகு ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்படுவது மிக மிக அரிதானது. வழக்கமாக ரத்தம் உறைதல் பாதிப்போடு ஒப்பிடுகையில் 10 லட்சம் டோசில் 2.3 பேருக்கு மட்டுமே இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: