மகளிர் ஹாக்கியில் மீண்டும் ஏமாற்றம்

ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் இந்திய பெண்கள் ஹாக்கி அணி, இங்கிலாந்திடமும் 1-4 என்ற கோல் கணக்கில் தோற்றது. ஏ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேற்று மோதின. தொடர்ந்து 2 தோல்விகளை சந்தித்த இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக கடுமையாகப் போராடியது. ஆனால் அந்த போராட்டம் இங்கிலாந்து வீராங்கனைகளின் வேகத்துக்கு முன் எடுபடவில்லை. 2வது நிமிடத்திலேயே  இங்கிலாந்து அணியின் ஹென்னா மார்டின் கோலடித்தார். தொடர்ந்து 19வது நிமிடத்தில் ஹென்னா மற்றொரு பீல்டு கோல் அடிக்க, இங்கிலாந்து 2-0 என முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து, பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய இந்திய அணிக்கு 23வது நிமிடத்தில் ஷர்மிளா தேவி பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்து நம்பிக்கை தந்தார். அது இந்திய வீரராங்கனைகளின் புத்துணர்ச்சி பெற்ற ஆட்டத்தில் தெரிந்தது.

ஆனால் 3வது கால் பகுதியில் லில்லி ஒஸ்லே, 4வது கால் பகுதியில் கிரேஸ் பால்ஸ்டன் ஆகிய இங்கிலாந்து வீராங்கனைகள் தலா ஒரு கோல் அடித்து அணியை வலுவான நிலைக்கு கொண்டுச் சென்றனர். கடைசி வரை முயன்றும் இந்திய வீராங்கனைகளால் அடுத்த கோல் அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இந்தியா ஏற்கனவே முதல் ஆட்டத்தில் நெதர்லாந்திடம் 1-5 என்ற கோல்கணக்கிலும் , தொடர்ந்து 2வது ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 0-2 என்ற கோல் கணக்கிலும்  தோல்வி அடைந்துள்ளது. இன்னும் 2 ஆட்டங்களே உள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள இந்திய அணியின் காலிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் அயர்லாந்து, தென் ஆப்ரிக்கா அணிகளை வீழ்த்துவதுடன், அந்த 2 அணிகளும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தால் மட்டுமே இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறலாம்.

Related Stories:

>