3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் ரேஷன் கடை விற்பனையாளர்களை பணியிடமாற்றம் செய்ய உத்தரவு

சேலம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அனைத்து மண்டல  இணைபதிவாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள், கட்டுநர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி புரிந்து வருவதால் பல தவறுகள் மற்றும் முறைகேடுகள் ஏற்படுவதாக புகார்கள் பெறப்படுகின்றன. இதனால், ரேஷன் கடை பணியாளர்கள் ஒரே கடையில் தொடர்ந்து 3 ஆண்டுக்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. அவர்கள், உடனடியாக வேறு ரேஷன் கடைகளுக்கு பணிமாற்றம் செய்யப்பட வேண்டும்.

சில சங்கங்கள் ஒரே ஒரு ரேஷன் கடை மட்டுமே நடத்துவதால், அதில், பணிபுரியும் பணியாளர்களை பணி பரவல் மூலம் வேறொரு சங்கம் நடத்தும் ரேஷன் கடைக்கு மாற்றம் செய்ய வேண்டும். அல்லது மற்றொரு சங்கத்துடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரேஷன் கடைகளில் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்கள் காணப்பட்டால் இதற்கு  பொது வினியோக திட்ட துணை பதிவாளர் மற்றும் இணைபதிவாளரே பொறுப்பு என கருதி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>