ஆதரவற்ற நிலையில் சாலையோரம் இறந்து கிடந்த முதியவரின் வங்கி கணக்கில் ரூ.20 லட்சம்: மதுரையில் பரபரப்பு

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை எதிரே 60 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற முதியவர் நேற்று காலை இறந்து கிடந்தார். மதுரை தல்லாகுளம் போலீசார் விசாரித்த போது அவரது சட்டைப்பையில் வங்கிக் கணக்கு புத்தகம் ஒன்று கசங்கிய நிலையில் இருந்தது. அதனை பார்த்தபோது, அவர் மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த ராதா (60), காமராஜர் பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதும், அவரது வங்கிக் கணக்கில் ரூ.20 லட்சத்திற்கும் மேலாக பணம் இருந்ததும் தெரிந்தது.  இறந்து கிடந்தவர் ஆதரவற்றவராக மதுரை அரசு மருத்துவமனை பகுதியில், கடந்த 10 நாட்களாக சுற்றித் திரிந்துள்ளார். இதைத்தொடர்ந்து, முதியவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் கூறும்போது, ‘‘ராதா பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், அதில் கிடைத்த தொகையை வங்கிக் கணக்கில் போட்டு வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகவில்லை. சிறிய வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், பழங்காநத்தத்தில் உள்ள தனது அண்ணன், அக்கா வீடுகளுக்கு மட்டும் அவ்வப்போது சென்று வந்துள்ளார். முறையாக சாப்பிடாததால், உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்பு மதுரை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் இருந்து வெளியேறியவர், பசி, பட்டினியுடன் சுற்றித்திரிந்து ரோட்டோரம் இறந்து கிடந்துள்ளார்’’ என்றனர்.

Related Stories:

>