கூடலூர் அருகே ஒர்க் ஷாப்பை சேதப்படுத்திய யானை கூட்டம்: கிராம மக்கள் பீதி

கூடலூர்: கூடலூர் அருகே வாகனங்கள் பழுது பார்க்கும் நிலையத்தை காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியது. நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட துப்புகுட்டி பேட்டை பகுதியில் வாகனங்கள் பழுது நீக்கும் ஒர்க்க்ஷாப் ராஜா என்பவர் நடத்தி வருகிறார். இப்பகுதிக்கு நேற்று இரவு வந்த 9 காட்டு யானைகள் கூட்டம் ஒர்க்க்ஷாப் ஷட்டரை உடைத்து, உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தியது. மேலும் அருகில் இருந்த வாகனங்களையும், கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளது.

இதேபோல், நாடு காணியை அடுத்த கீழ் நாடுகாணி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ஒற்றை காட்டு யானை நேற்று காலை முதல் உலா வந்தது. இது குறித்து அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவயிடத்துக்கு சென்று யானையை கண்காணித்து வந்தனர். தொடர்ந்து நேற்று இரவு யானை எம்.ஜி. என்பவரது வீட்டிற்கு அருகே வந்தபோது, கிராம மக்கள் மற்றும் வனத்தறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டினர்.

இதனைத் தொடர்ந்து யானை அப்பகுதியிலிருந்து பொன்வயல் பகுதிக்கு சென்று முகாமிட்டு உள்ளது. தற்போது, மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், காட்டு யானைகள் கிராமங்களை ஒட்டி வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால், வனத்துறையினர் கிராம மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும், இரவு நேரத்தில் வெளியே நடமாட வேண்டாம் என்றும் எச்சரித்து வருகின்றனர்.

Related Stories: