திருப்பூரில் கூலி உயர்வு கேட்டு பவர் டேபிள் உரிமையாளர்கள் ஸ்டிரைக்: ரூ4 கோடி வருவாய் இழப்பு

திருப்பூர்: திருப்பூரில் கூலி உயர்வு கேட்டு பவர் டேபிள் உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2000த்துக்கும் மேற்பட்ட கம்பெனிகள் மூடப்பட்டுள்ளதால் ரூ.4 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் பனியன் தொழில் பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது. பனியன் நிறுவனங்கள் மற்றும் அதன் சார்புடைய தொழில் நிறுவனங்களில் வெளி மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பனியன் தையல் தொழிலில் பவர் டேபிள், சிங்கர் என இரு பிரிவுகளாக தைத்தால் தான் பனியன் உள்ளிட்ட ஆடைகள் முழுமை பெறும். மேலும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் சிறிய, பெரிய அளவில் சுமார் 2000 பவர் டேபிள் கம்பெனிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 1.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தில் கூலி உயர்வு கேட்டு இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

அதன் படி இன்று முதல் திருப்பூரில் உள்ள பவர் டேபிள் கம்பெனிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக பவர் டேபிள் கம்பெனிகளில் தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்க செயலாளர் நந்தகோபால் கூறியதாவது: கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில் பிரதானமாக தொழிலாளர்கள் சம்பளம், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு வாகன கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

மேலும் தையல் நூல் விலை அதிகரித்துள்ளது. இதனால் சைமாவின் ஒப்பந்தத்தில் போடப்பட்டுள்ள கூலி பற்றாக்குறையாக உள்ளது. அதே போல் கூலி உயர்வு ஒப்பந்தம் காலாவதியாக 9 மாதங்கள் ஆகிறது. இது வரையில் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இது குறித்து சைமா நிர்வாகிகளுக்கு ஏற்கனவே கடிதம் எழுதினோம். அதில் அவர்கள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின்பு பவர் டேபிள் உரிமையாளர்களை அழைத்து பேச முடியும் என்று பதில் கடிதம் அனுப்பி உள்ளார்கள்.

சைமா சங்கங்கள் கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை இந்த வேலை நிறுத்தம் போராட்டம் தொடரும். நாளொன்றுக்கு ரூ.4 கோடி வரை வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நந்தகோபால் கூறினார்.

Related Stories: