இந்தி பாடலாசிரியா் தொடுத்த வழக்கு; கங்கனாவுக்கு ‘வாரண்ட்’ எச்சரிக்கை: செப். 1ல் நேரில் ஆஜராக உத்தரவு

மும்பை: இந்தி பாடலாசிரியர் தொடுத்த வழக்கில் ஆஜராகாத நடிகை கங்கனாவுக்கு அந்தேரி நீதிமன்றம் வாரண்ட்  எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்தாண்டு நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த பிறகு, நடிகை கங்கனா அளித்த பேட்டி ஒன்றில் இந்தி பாடலாசிரியா் ஜாவித் அக்தர் குறித்து அவதூறான கருத்தை கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கங்கனா  மீது அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாவித் அக்தர் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு மீதான விசாரணைக்கு இதுவரை கங்கனா நேரடியாக ஆஜராகவில்லை.

இந்நிலையில், இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கங்கனா தரப்பில், நேரடியாக ஆஜராக நிரந்தரமாக விலக்கு கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். அதற்கு பதில் மனு தாக்கல் செய்த ஜாவித் அக்தர் கங்கனாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். மேற்கண்ட மனுக்களை விசாரித்த மாஜிஸ்திரேட், கங்கனாவுக்கு விசாரணைக்கு ஆஜராக நிரந்தரமாக விலக்கு அளிக்கவில்லை. அதே நேரம் கடைசியாக ஒருமுறை நேற்று மட்டும் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தார்.

மேலும் அடுத்து விசாரணை நடைபெறும் நாளில் கங்கனா கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று  உத்தரவிட்டார். அதேநேரம், கைது வாரண்ட் பிறப்பிக்க கோரிய ஜாவித் அக்தரின் மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார். அடுத்த முறை கங்கனா ஆஜராக தவறினால், அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க கோரி மனு தாக்கல் செய்யுமாறு ஜாவித் அக்தர் தரப்பிடம் மாஜிஸ்திரேட் கூறி, வழக்கை செப். 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories:

>