×

அசாம் - மிசோரம் எல்லை வன்முறையில் போலீஸ்காரர் பலி 6 ஆக உயர்வு: பதற்றம் அதிகரிப்பால் வீரர்கள் குவிப்பு

கவுகாத்தி: அசாம் - மிசோரம் எல்லை பிரச்னை தொடர்பாக இரு மாநில போலீசார் இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 6 பேர் இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த போலீசாரில் ஒருவர் தற்போது இறந்துள்ளார். அதனால், போலீசாரின் இறப்பு எண்ணிக்கை ஏழு ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘6வது அசாம் போலீஸ் பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த ஷியம்பிரசாத் துசாத், சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவரது, வயிற்றில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தைரியமான தியாகிக்கு தலைவணங்குகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக கடந்த திங்களன்று, இரு மாநிலங்களின் போலீசாரிடையே ஏற்பட்ட வன்முறை மோதலில், ஐந்து போலீசார் மற்றும் பொதுமக்கள் ஒருவர் என, 6 பேர் இறந்தனர். கச்சார் போலீஸ் எஸ்பி உட்பட 50 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மிசோரமின் 3 மாவட்ட எல்லையில் 3,000 கமாண்டோ வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவிக்கப்பட்டுள்ளனர். அசாம் எல்லையோர மக்கள், எல்லை பிரச்னையை தீர்க்கக்கோரி இன்று முதல் காலவரையற்ற பொருளாதார முற்றுகை போராட்டத்தை  அறிவித்துள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Tags : Assam ,Mizoram , Assam-Mizoram border violence kills 6 policemen: Tensions escalate
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...