பிறந்த நாள் கொண்டாடுவதற்காக பெண்ணிடம் ‘ஜிமிக்கி கம்மலை’ பறித்து சென்ற இன்ஜினியர் கைது

புதுடெல்லி: பிறந்த நாள் கொண்டாடுவதற்காக நடந்து சென்ற பெண்ணிடம் ஜிமிக்கி கம்மலை பறித்து சென்ற இன்ஜினியரை டெல்லி போலீசார் கைது செய்தனர். டெல்லியின் மன்சரோவர் பார்க் பகுதியில் நடந்து சென்ற பெண்ணின் காதில் அணிந்திருந்த தங்க ஜிமிக்கி கம்மலை, பைக்கில் வந்த மர்ம நபர் பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், குற்றவாளியை மன்சரோவர் பார்க் போலீசார் தேடி வந்தனர்.

சம்பவம் நடந்த பகுதியில் நிறுவப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இருந்து முகமூடி அணிந்து கொண்டு பைக்கில் வந்த நபர், ஜிமிக்கி கம்மலை பறித்துச் செல்வது உறுதி செய்யப்பட்டது. குற்றவாளியின் பைக் நம்பர் பிளேட்டை கொண்டு தேடலாம் என்று முயற்சி செய்த போது, அவன் வந்த பைக்கின் இருபுறமும் அமைக்கப்பட்ட இரண்டு நம்பர் பிளேட்டுகளிலும் பதிவு எண் இல்லை. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மதுக்கடையில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

அப்போது பைக்கில் நம்பர் பிளேட் இல்லாமல் மது குடிக்க வந்த ஒருவனை பிடித்து விசாரித்ததில், பெண்ணிடம் ஜிமிக்கி கம்மலை பறித்து சென்றது  தெரியவந்தது. அதையடுத்து போலீசார் அவனை கைது செய்து விசாரிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட மோஹித் கவுதம், டெல்லியின் ஷஹ்தாரா அடுத்த ஜோதி நகரை சேர்ந்தவனாவான். இவன், ஜூனியர் இன்ஜினியராக தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறான்.

தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, அந்தப் பெண்ணின் தங்க ஜிமிக்கி கம்மலை பறித்ததாக தெரிவித்தான். அசோக் நகரில் வசிக்கும் சுரேந்தர் என்ற தங்க நகைக்கடையில், ஜிமிக்கி கம்மலை விற்றுள்ளான். அதையடுத்து அவனை கைது செய்து விசாரிக்கிறோம்’ என்றனர்.

Related Stories:

>