தாய், தந்தை, சகோதரன் ஆகியோருக்கு மீண்டும் தொற்று; பெண் மருத்துவருக்கு 13 மாதத்தில் 3 முறை கொரோனா ‘பாசிடிவ்’- தடுப்பூசி போட்ட பின்னர் 2 முறை பாதிப்பால் அதிர்ச்சி

மும்பை: மும்பையை சேர்ந்த பெண் மருத்துவருக்கு கடந்த 13 மாதத்தில் 3 முறை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், இரு தடுப்பூசி டோஸ் போட்ட பின்னர் இருமுறை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் மீண்டும் தொற்று பாதிப்பு வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் முலுண்ட் பகுதியில் உள்ள வீர் சாவர்க்கர் மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றிய டாக்டர் ஸ்ருஷ்டி ஹலாரி (27) என்பவருக்கு கடந்த ஆண்டு ஜூன் 17ம் தேதி முதன்முதலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தொடர் சிகிச்சைக்கு பின்னர், அவர் குணமடைந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் பணியாற்றி வந்த நிலையில் முதல் கொரோனா தடுப்பூசியை (கோவிஷீல்டு) இந்த ஆண்டு மார்ச் 8ம் தேதியும், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை ஏப்ரல் 29ம் தேதியும் போட்டுக் கொண்டார். அதேபோல், அவரது குடும்பத்தை சேர்ந்த அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், தடுப்பூசி போட்ட ஒரு மாதம் கழித்து அதாவது மே 29ம் தேதி டாக்டர் ஸ்ருஷ்டி ஹலாரிக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து, அவர் வீட்டுத் தனிமையில் இருந்தார். தொடர் சிகிச்சைக்கு பின்னர், அவர் மீண்டும் மருத்துவ சேவையில் ஈடுபட்டார். ஆனால், கடந்த 11ம் தேதி டாக்டர் ஸ்ருஷ்டி ஹலாரிக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல், அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தொற்று உறுதியானது, அவர்கள் அனைவரும் தற்போது ரெம்டெசிவிர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து டாக்டர் ஸ்ருஷ்டி ஹலாரி கூறுகையில், ‘மூன்றாவது முறையாக தொற்று பாதித்த போது மிகவும் கஷ்டப்பட்டேன்.

நானும் எனது குடும்பத்தை சேர்ந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். ரெம்டெசிவிர் மருந்து எடுத்துக் கொண்டு வருகிறோம். என் சகோதரருக்கும், தாய்க்கும் நீரிழிவு நோய் உள்ளது. என் தந்தைக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு பிரச்னைகள் உள்ளன. என் சகோதரருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால், அவர் இரண்டு நாட்கள் ஆக்ஸிஜனில் வைக்கப்பட்டார். ரத்தத்தில் உள்ள கோவிட் ஆன்டிபாடிகளுக்கான பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. 13 மாதத்தில் 3 முறை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் மட்டுமே, நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக கிடைத்துவிடும் என்று கூறிவிட முடியாது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பின்னரும் கூட, மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படலாம். தடுப்பூசியால், தொற்று பாதிப்பின் ஆபத்தான சூழலில் இருந்து தப்பிக்க முடியும்’ என்றார். இதுகுறித்து மும்பையின் வோக்ஹார்ட்டின் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பெஹ்ராம் பர்திவாலா கூறுகையில், ‘இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பின்னரும், கொரோனா பாசிடிவ் நோயாளிகளை பார்த்து வருகிறோம்.

எல்லா வயதினருக்கும், தொற்று மீண்டும் பாதிக்க வாய்ப்புள்ளது. ஆனால் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதால், நோயின் தீவிரத் தன்மை குறைவாக இருக்கும். அதனால், நோயாளி விரைவாக குணமடைய முடியும்’ என்றார்.

Related Stories: