மார்கண்டேயா அணை விவகாரம்; தமிழ்நாடு, கர்நாடக அரசுகளுக்கு நீர்வள ஆணைய தலைவர் கடிதம்: வைகோ கேள்விக்கு அமைச்சர் விளக்கம்

சென்னை: மக்களவையில் வைகோ எம்.பி பேசுகையில், ‘‘தமிழ்நாட்டு உழவர்களின் வேளாண்மைக்குத் தண்ணீர் வருவதைத் தடுக்கின்ற வகையில், கர்நாடக அரசு மார்கண்டேயா ஆற்றில் அணை கட்டியது குறித்தும்,  தமிழ்நாட்டு அரசு எதிர்ப்புத் தெரிவித்து இருக்கின்றதா? தமிழ்நாடு எழுப்பி இருக்கின்ற கோரிக்கைகளை ஆய்வு செய்ய, ஒரு தீர்ப்பு ஆயம் அமைக்கப்படுமா? இல்லை என்றால், ஏன்? அதற்கான காரணங்களத் தர வேண்டும்’’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் விளக்கமளித்த கூறுகையில், ‘‘1956ம் ஆண்டு, மாநிலங்களுக்கு இடையிலான ஆற்று நீர் பங்கீட்டுப் பிரச்சினைகள் சட்டத்தின் பிரிவு 3 இன் கீழ் 2019 நவம்பர் 30ம் தேதி, தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டுகள் அடங்கிய கோரிக்கை விண்ணப்பத்தை அனுப்பி இருக்கின்றது. அதே சட்டத்தின் 4வது பிரிவின் கீழ், பெண்ணையாறு அல்லது தென் பெண்ணை என அழைக்கப்படுகின்ற ஆற்று நீர்ப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைப் பேசித் தீர்த்து வைப்பதற்கு, தீர்ப்பு ஆயம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

பெண்ணை ஆற்றின் துணை ஆறுகளுள் ஒன்றான மார்கண்டேயா ஆற்றில், 500 எம்சிஎப்டி நீர் தேக்கி வைப்பதற்காக, தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் யார்கோல் என்ற கிராமத்தில், கர்நாடக அரசின் ஊரக குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் வாரியம் ஒரு அணை கட்டுவதற்கு, அதே கோரிக்கை விண்ணப்பத்தில், தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்து இருக்கின்றது. மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஒன்றிய நீர்வள ஆணையத்தில் தலைவர் தலைமையில், ஒரு பேச்சுவார்த்தைக் குழு 2020ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதியன்று ஆற்றுநீர் பங்கீட்டுப் பிரச்சினைகள் சட்டத்தின் பிரிவு 4ன் கீழ் அமைக்கப்பட்டது.

இரண்டு கூட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனால், மேற்கொண்டு பேசுவதில் பயன் இல்லை என்று அந்தக் குழு கூறியதால், அடுத்து கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்தப் பிரச்சனை தொடர்பாக, ஒன்றிய நீர்வள ஆணையத்தின் தலைவர் கடந்த மார்ச் 16ம் தேதி மற்றும் ஜூலை 8ம் தேதி ஆகிய நாள்களில் மேற்கொண்டு தகவல்கள் கேட்டு, தமிழ்நாடு கர்நாடக அரசுகளுக்குக் கடிதம் எழுதி உள்ளார். அந்தத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன’’. இவ்வாறு அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறினார்.

Related Stories: