லண்டன் பல்கலையில் உயர் கல்வி படிக்க சீட்டு வாங்கி தருவதாக இன்ஜினியரிடம் ரூ38.89 லட்சம் மோசடி செய்த நபர் கைது

சென்னை: லண்டனில் உயர் கல்வி படிக்க சீட்டு வாங்கி தருவதாக ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிடம் ரூ.38.89 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை சாலிகிராமம் ஆற்காடு சாலை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(23). இவர் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர் உயர் படிப்பு படிக்க லண்டனில் உள்ள பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது விருகம்பாக்கம் பகுதியில் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி படிப்பு சேர்க்கை நிறுவனம் நடத்தி வரும் கார்த்திக் என்பவர் பழக்கமானார்.

இவர் தனது மனைவி சவுகார்த்திகாவுடன் நிறுவனம் நடத்தி வருகிறார். அப்போது வெங்கடேசனிடம் தனது நன்கு அறிமுகமான லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி படிக்க சீட்டு வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார். அதற்காக வெங்கடேசனிடம் ரூ.38.89 லட்சம் பணத்தை கார்த்திக் மற்றும் அவரது மனைவி சவுகார்த்திகா ஆகியோர் வாங்கி உள்ளனர். பிறகு லண்டன் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி சீட்டு வழங்கியது போல் போலியாக தயார் செய்து வெங்கடேசனிடம் கொடுத்துள்ளனர்.

மேலும் மாணவருக்கான விசாவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அதன்படி அவர் லண்டன் செல்ல தயாராகி விமான நிலையத்திற்கு சென்ற போது குடியுரிமைத்துறை அதிகாரிகள் மாணவர் விசாவை ஆய்வு செய்த போது அது போலியானது என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் சம்பவம் குறித்து கார்த்திக்கிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. பின்னர் மோசடி குறித்து வெங்கடேசன் விருகம்பாக்கம் காவல் நியைத்தில் புகார் அளித்தார்.

ஆனால் அந்த புகாரின் படி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாணவர் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்தார். பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த மார்ச் மாதம் விருகம்பாக்கம் போலீசார் மோசடி செய்த கார்த்திக் மற்றும் அவரது மனைவி சவுகார்த்திகா மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்த தகவல் அறிந்த கணவன் மனைவி இருவரும் தலைமறைவாகிவிட்டனர். பின்னர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு நேற்று ரூ.38.89 லட்சம் மோசடி செய்த காாத்திக்கை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது மனைவி சவுகார்த்திகாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: