பெரியபாளையம் அருகே பரபரப்பு: பயிர்களை மேய்ந்த மாடுகளை சிறைப் பிடித்த விவசாயிகள்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே பயிர்களை மேய்ந்து சேதப்படுத்திய மாடுகளை விவசாயிகள் பிடித்து கட்டிப்போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம்  அருகே காதர்வேடு கிராமத்தில் 1000 ஏக்கரில்  நெல், வேர்க்கடலை மற்றும் பூச் செடிகள் பயிரிட்டுள்ளனர். ஆனால் பயிர்களை பாதுகாக்க உரியமுறையில் வேலி அமைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள சுமார் 400 ஏக்கர் பயிர்களை மாடுகளை நாசம் செய்துவந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து விவசாயிகள், சம்பந்தப்பட்ட மாட்டு உரிமையாளர்களிடம் பலமுறை எடுத்துரைத்தனர். தண்டோரா மூலமும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுசம்பந்தமாக தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என பல்வேறு இடங்களில்  புகார் கொடுத்துள்ளனர். இருப்பினும் இந்த விஷயத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் விவசாயிகள் விரக்தியில் இருந்தனர். இந்தநிலையில் நேற்றிரவு மீண்டும் மாடுகள் பயிர்களை மேய்ந்துகொண்டிருப்பதாக கிடைத்த தகவல்படி, விவசாயிகள் விரைந்தனர்.

அங்கு வயல்வெளியில் மேய்ந்துகொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட மாடுகளை சுற்றிவளைத்து பிடித்து கட்டி வைத்தனர். மீதமுள்ள மாடுகள் விவசாயிகள், விரட்டியதால் ஓடிவிட்டது. பிடிபட்டுள்ள மாடுகளை தேடி இதுவரை உரிமையாளர்கள் வராததால் அவற்றை  கோசாலையில் ஒப்படைக்க விவசாயிகள் முடிவு செய்தனர்.

Related Stories: