கேரளாவில் கள்ள நோட்டுகள் அச்சடிப்பு: 7 பேர் கும்பல் அதிரடி கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கூத்தாட்டுக்குளம் பகுதியில் உள்ள கடைகளில் சிலர் கள்ள நோட்டுக்களை கொடுத்து பொருட்கள் வாங்கி வந்து உள்ளனர். பொது மக்கள் பொருட்களை வாங்கி விட்டு சென்ற பிறகுதான் அது கள்ள நோட்டுக்கள் என்பது வியாபாரிகளுக்கு தெரிந்ததாம். இதனால் சிலர் போலீசுக்கு பயந்து வெளியே சொல்லாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வியாபாரி ஒருவருக்கு கள்ளநோட்டு கிடைத்தது. இதையடுத்து தனது உறவினரான போலீஸ்காரரிடம் விவரத்தை கூறினார்.

தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று கள்ளநோட்டை கொடுத்தவர்கள் மீண்டும் கடைக்கு வந்தால் தகவல் கொடுக்குமாறு கூறி சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்கு கள்ளநோட்டுடன் ஒருவர் வந்தார். சுதாரித்துக் கொண்ட கடைக்காரர் போலீசுக்கு தகவல் ெகாடுத்தார். அதைத் தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட நபரை பின்தொடர்ந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பங்களாவுக்கு அவர் சென்றதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அந்த பங்களாவை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அங்கு ஆண்கள் மட்டும் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று பங்களாவில் போலீசார் அதிரடியாக ரெய்டு நடத்தினர். அப்போது கள்ளநோட்டுகள் அச்சிடுவது தெரியவந்தது. இந்த ரெய்டின் போது போலீசார் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் கள்ள நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்திய 5 பிரிண்டர்கள், ெஜராக்ஸ் மிஷின், ஸ்கிரீன் பிரிண்டிங் இயந்திரம், மை உள்பட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக பத்தனம் திட்டா ரான்னியை சேர்ந்த மதுசூதனன் (48), திருச்சூரை சேர்ந்த ஜிபி (36), கோட்டையத்தை சேர்ந்த பைசல் (34) வண்டிபெரியாரை சேர்ந்த ஆனந்த் ரவி (24). ஸ்டீபன் (33), தங்கமுத்து (60), கோட்டயம் நெடுங்கண்டத்தை சேர்ந்த சுனில்குமார் (40) ஆகிய 7 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து 7 பேர் கும்பலிடம் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அந்த பகுதியில் உள்ள பல்வேறு கடையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளதும், சினிமா ஷூட்டிங் நடத்துவதற்கு என்று பங்களாவை வாடகைக்கு எடுத்து கள்ள நோட்டுகள் அடிக்க பயன்படுத்தியதும் தெரியவந்தது. தொடர்ந்து 7 பேரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>