×

சசிகலா விவகாரம் குறித்து மோடி, அமித்ஷாவிடம் பேசிய நிலையில் அதிமுக ஒற்றை தலைமை கீழ் வரும்; திடீரென உரிமை கொண்டாடும் டிடிவி.தினகரன்: வாய் திறக்க மறுக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்

சென்னை: சசிகலா விவகாரம் குறித்து மோடி, அமித்ஷாவிடம் ஓபிஎஸ், இபிஎஸ் பேசிய நிலையில், அதிமுக ஒற்றை தலைமை கீழ் வரும் என டிடிவி.தினகரன் பேட்டியளித்துள்ளார். இது குறித்து, ஓபிஎஸ், இபிஎஸ் வாய் திறக்க மறுத்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் விடுதலையான சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், டிடிவி.தினகரனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜ, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைத்து களம் கண்டது. சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்ளவில்லை.

அமமுகவுடனும் கூட்டணி வைக்கவில்லை. அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என்று அமித்ஷா கடைசி வரை போராடினார். ஆனால், சசிகலா கட்சிக்குள் வந்தால், தன்னுடைய செல்வாக்கு குறைந்து விடும் என எடப்பாடி கடுமையாக எதிர்த்தார். தேர்தலில் தோல்வியடைந்ததும், அதிமுக-பாஜ தலைவர்கள் பரஸ்பர குற்றச்சாட்டை பகிரங்கமாக தெரிவித்து மோதி கொண்டனர். இந்த சூழலில், அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களுடன் சசிகலா பேசிய ஆடியோ ஒவ்வொன்றாக வெளியானது. இது, எடப்பாடி உள்ளிட்ட அதிமுக தலைவர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்தது. சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசவில்லை என எடப்பாடி கூறினார்.

அதன்பிறகு, சசிகலா யாருடன் பேசினார் என்று பெயருடன் விவரம் வெளியானது. சசிகலாவின் பேச்சை கேட்ட மாஜி அமைச்சர்களும், அதிமுகவில் மீண்டும் சசிகலா இணைய வாய்ப்பே இல்லை. அவர் ஜெயலலிதாவுக்கு வேலை செய்தவர் என கடுமையாக விமர்சித்தனர். ஆனால், ஓபிஎஸ் உள்ளிட்ட ஒரு சிலர் மாஜி அமைச்சர்கள் மட்டும் சசிகலா குறித்து எதுவுமே பேசவில்லை. இதற்கிடையே, தேர்தலுக்கு முன்பும், பின்பும் அதிமுகவில் அதிகாரம் மற்றும் பதவி போட்டி, கட்சி பதவி நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக, முதல்வர் வேட்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு இருவரும் குழாயடி சண்டை போல் மோதி கொண்டனர்.

மூத்த தலைவர்கள் எடப்பாடி பக்கம் நின்றதால், ஓபிஎஸ் விரக்தியடைந்தார். இதனால், இரண்டாம் நிலை பொறுப்பே அவருக்கு கிடைத்தது. கட்சிக்குள் ஓரம்கட்டப்படுவதால், தனது லாபியை நிரூபிக்க ஓபிஎஸ் டெல்லியில் ஆதரவாக உள்ள பாஜ மேலிட தலைவர்களை அணுகினார். இதையடுத்து, பிரதமர் மோடி சந்திக்க நேரம் கொடுத்ததையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி புறப்பட்டு சென்றார். இதையறிந்த எடப்பாடி மற்றும் மாஜி அமைச்சர் வேலுமணி நிர்மலா சீதாராமன் மூலம் ஓபிஎஸ்சுடன் மோடியை சந்திக்க நேரம் வாங்கி தரும்படி கேட்டுக்கொண்டு, சந்தித்து வந்துள்ளனர்.

என்னதான் வெளியில் ஒன்றாக இருப்பதாக சொன்னாலும், கூட்டாக சந்திப்பு முடிந்த பின் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியாக சந்தித்து கட்சிக்குள் நடக்கும் மோதல்களை விளக்கி ஆளாளுக்கு ஒரு மனுவை கொடுத்துவிட்டு வந்தனர். மோடியுடனான சந்திப்புக்கு பின் நிருபர்களை சந்தித்த எடப்பாடி, சசிகலா குறித்து எழுப்பிய கேள்விகளை முற்றிலுமாக தவிர்த்து நடையை கட்டினார். ஓபிஎஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் வாயே திறக்கவில்லை. தொடர்ந்து, அமித்ஷாவையும் சந்தித்து ஓபிஎஸ், இபிஎஸ் பேசினர். அப்போது, ‘தேர்தல் தோல்விக்கு அதிமுகதான் காரணம். சசிகலாவை சேர்த்து இருந்தால், இப்படி தோற்க வாய்ப்பு இல்லை’ என அமித்ஷா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலா பேசிய ஆடியோ வெளியான பிறகு பலமுறை பேட்டியளித்த எடப்பாடி, சசிகலாவை கடுமையாக விமர்சித்து பேசினார். கட்சியில் இடமே இல்லை என கூறினார். தற்போது, அவர் வாய் திறக்க மறுப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. அதேநேரத்தில், தேர்தலுக்கு முன்பு அமமுகவின் பொதுச்செயலாளர்தான் நான். அதிமுகவை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். அதிமுகவில் இருப்பவர்கள் விரைவில் அமமுகவுக்கு வருவார்கள். உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் அமமுகவில்தான் இருக்கிறார்கள் என்று பேட்டியளித்த டிடிவி.தினகரன் தற்போது பல்டி அடித்துள்ளார்.

நேற்று திருச்சியில் டிடிவி.தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தேர்தலில் வெற்றி, தோல்வியை கடந்து எங்கள் இலக்கை நோக்கி நாங்கள் பயணம் செய்கிறோம். அதிமுக, அமமுக இணையுமா என்கிற யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் பிரதமரை சந்தித்திருப்பது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அதிமுகவை மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. அதிமுக தொடங்கியது முதல் எம்ஜிஆர், ஜெயலலிதா என்கிற ஒற்றை தலைமையும், சிறைக்கு செல்லும் முன்பு வரை சசிகலா என்கிற ஒற்றை தலைமையில் தான் அதிமுக இருந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. விரைவில் அது சரியாகி விடும்.

முன்னாள் அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் நடவடிக்கை என்பது உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்தால் சரிதான்’’ என்றார்.  டிடிவி.தினகரன் திடீரென அதிமுகவை உரிமை கொண்டாடுவது, கட்சியை விரைவில் சரி செய்து விடலாம் என சசிகலா பேசி வருவது, மோடி, அமித்ஷா உடனான சந்திப்புக்கு பின் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா குறித்து பேச மறுப்பது என அனைத்தும் பார்க்கும்போது அதிமுகவில் ஏதோ ஒன்று நடக்க போகிறது என்பது உறுதியாக தெரிகிறது.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் எடப்பாடி, ஓபிஎஸ் மற்றும் மாஜி அமைச்சர்கள் சிக்கி உள்ளதால், அவர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள டெல்லியிடம் சரணடைந்து உள்ளதாக அதிமுகவினரே கமென்ட் அடித்து வருகின்றனர். இதனால், டெல்லி எடுக்கும் முடிவுக்கு இவர்கள் அனைவரும் அடிபணிந்து செல்வார்கள் என கூறப்படுவதால், மீண்டும் பல்வேறு நாடகங்கள் அதிமுகவில் அரங்கேறி, தலைமை மாற்றம் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : AIADMK ,Modi ,Amit Shah ,DTV.Dhinakaran ,OBS ,EPS , AIADMK will come under a single leadership as Modi has spoken to Amit Shah on the Sasikala issue; Suddenly celebrating DTV.Dhinakaran: OBS refuses to open its mouth, EPS
× RELATED ஓசூர் அருகே ஒற்றை யானை நடமாட்டம் - வனத்துறை எச்சரிக்கை