குர்ணாலுடன் தொடர்பில் இருந்த 8 வீரர்களுக்கும் நெகட்டிவ்: அறிவித்தபடி இன்று 2வது டி20 போட்டி

கொழும்பு: ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா 38 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது போட்டி நேற்று நடைபெற இருந்தது. இந்திய அணியின் ஆல்ரவுண்டர் குர்ணால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், நேற்றைய போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. குர்ணால் இருமல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டதால் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது.

இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த வீரர்கள், அணி நிர்வாகத்தினர் உள்பட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அனைவருக்கும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதையடுத்து அறிவித்தபடி இன்று 2வது டி20 போட்டியும், நாளை கடைசி போட்டியும் நடைபெறுவது உறுதியாகி உள்ளது. இருப்பினும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் . தொடர் முடிந்ததும் 30ம் தேதி இந்திய அணியினர் நாடு திரும்புகின்றனர்.

ஆனால் குர்ணால் பாண்டியா, குணமடையும் வரை கொழும்புவில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருப்பார். குணமடைந்த பின்னரே நாடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் முடிந்த பின்னர் தொடக்க வீரர் பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து புறப்பட்டு செல்ல உள்ளனர். அங்கு சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் இருவரும் அணியுடன் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: