பசுமை மாநகராட்சி திட்டத்தின் கீழ் சென்னையில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் விரைவில் தொடக்கம்

சென்னை: பசுமை மாநகராட்சி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில், சென்னை மாநகரை தூய்மையாக்கவும், அழகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 79,477 சுவரொட்டிகள் முழுவதும் அகற்றப்பட்டு விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றது.

அதைப்போன்று பூங்காக்கள், ஏரிகள் புனரமைக்கப்பட்டும் வருகிறது. மேலும் சென்னையை அழகுபடுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது.

அதன்படி சென்னையில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் காற்று மாசு, ஒலி மாசு குறைவதோடு, இரண்டரை மடங்கு கூடுதல் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்றும், சுற்று வட்டார பகுதிகள் பசுமையாக காட்சி அளிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 10 லட்சம் மரக்கன்றுகள் எந்தெந்த பகுதிகளில் நட்டு வளர்ப்பது, என்ன மாதிரியான மரக்கன்றுகளை நடுவது, எப்படி பராமரிப்பது, திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது தொடர்பாக நாளை பிற்பகல் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்கின்றனர். அதன்பிறகு சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் இந்த திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: