சென்னையில் விரைவில் கொரோனா நினைவு பூங்கா: மின்ட் பாலத்தின் கீழ் 3 ஏக்கரில் அமைக்க திட்டம்

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் இதன்தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. குறிப்பாக மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பும் அதிகமாக இருந்தது. சென்னையில்  கடந்த 26ம் தேதி வரை பாதிக்கப்பட்டவர்கள் 5 லட்சத்து 37 ஆயிரத்து 249 பேர். அதில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 435 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் 1,502 பேர் மட்டுமே உள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி இதுவரை 8,312 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் முதல் அலையில் கொரோனாவின் வீரியம் குறைவாக இருந்த போதும் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முந்தைய அதிமுக அரசு தடுமாறியது. ஆனால் இரண்டாவது அலையை சென்னை மாநகராட்சி சிறப்பாக கையாண்டு ஒரு மாதத்திற்குள் கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை நினைவு கூரும் வகையில் விரைவில் கொரோனா நினைவு பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டை மின்ட் பாலத்தின் கீழ் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் சீரமைக்கப்பட்டு அங்கு பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும் இதற்கான வரைபடம் தயாரிப்பு பணி நடைபெற்று வருவதாகவும் பூங்கா அமைப்பதற்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவிலேயே முதன் முறையாக கொரோனாவை நினைவூட்டும் வகையில் பூங்கா அமைப்பது சென்னையில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: