சென்னையில் 3,584 கர்ப்பிணி தாய்மார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் 2 கோடி பேருக்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் சென்னையில் 3,584 கர்ப்பிணி தாய்மார்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் 3 பேருக்கு 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம்  சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதைத் தொடர்ந்து முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கும், அதன்பிறகு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதையடுத்து கடந்த மே மாதம் 1ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தமிழகத்தில் முதலில் தடுப்பூசி போடும் பணி மிகவும் மந்தமாகவே இருந்தது. அதன்பின்னர் மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக தடுப்பூசி போடும் பணி அதிகரித்தது. அதன்படி தமிழகத்தில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 27ம் தேதி வரை 4 லட்சத்து 57 ஆயிரத்து 951 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஆனால் மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 30 லட்சத்து 31 ஆயிரத்து 631 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 79 ஆயிரத்து 887 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1 கோடியே 73 லட்சத்து 25 ஆயிரத்து 995 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 27 லட்சத்து 53 ஆயிரத்து 892 பேர் கோவாக்சின் தடுப்பூசியும் போட்டுள்ளனர். அதில் 60 வயதுக்கு மேற்பட்ட 37 லட்சத்து 22 ஆயிரத்து 275 பேரும், 45 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 66 லட்சத்து 706 பேரும், 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்ட 77 லட்சத்து 54 ஆயிரத்து 667 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 81 ஆயிரத்து 766 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதில் 60 வயதுக்கு மேற்பட்ட 27 ஆயிரத்து 225 பேரும், 45 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 85 ஆயிரத்து 718 பேரும், 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 66 ஆயிரத்து 893 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் தடுப்பூசி தொடர்ந்து போடப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக கடந்த 25ம் தேதி கர்ப்பிணி தாய்மார்களுக்கு செலுத்தப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி விவரம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கத்தின் சார்பில் வெளியிட்டப்பட்டது.

அதன்படி சென்னையில் முதல் தவணை தடுப்பூசி 3,584 கர்ப்பிணி தாய்மார்களுக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 3 தாய்மார்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது கர்ப்பிணி தாய்மார்களிடம் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால் வரும் நாட்களில் அதிகப்படியான தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: