புகையிலை இல்லா மாவட்டமாக உருவாக்க முழு ஒத்துழைப்பு தேவை

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலை விற்பனையை முற்றிலும் தடுப்பது தொடர்பாக  கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.கலெக்டர் விசாகன் தலைமை வகித்து பேசியதாவது: புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் வாய், நுரையீரல், இரைப்பை, குடல் போன்ற இடங்களில் புற்றுநோயும், மூளை பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்படுகிறது.

எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்களின் உற்பத்தி, விற்பனைக்கு கடந்த 21.5.2013 முதல் தமிழக அரசானை எண்: 257ன் வாயிலாக தடை விதித்துள்ளது. எனினும் தொடர்ந்து தடையை மீறி புகையிலை பொருட்களின் விற்பனை நடந்து வருவதால் அதனை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தலைமையில் நடந்த மாநில அளவிலான அனைத்து துறை அலுவலர்கள், வணிகர்களுக்கான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இக்கூட்டம் நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை புகையிலை விற்பனை தொடர்பாக 42  குற்ற வழக்குகள் நீதிமன்றத்திலும், 9 வழக்குகள் மாவட்ட வருவாய் அலுவலர் நீதிமன்றத்திலும் தொடரப்பட்டுள்ளன. ரூ.14,00,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 12,590 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகையிலை விற்பனையை தடுக்க மாவட்டம் முழுவதும் 11 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. புகையிலை விற்பனை தொடர்பான தகவல்களை 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

மேலும் புகையிலை பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக தடை செய்து புகையிலை இல்லா திண்டுக்கல் மாவட்டத்தை உருவாக்க 2 மாதங்கள் இலக்கு நிர்ணயித்து தீவிரமாக உணவு பாதுகாப்பு துறை செயல்பட்டு வருகிறது. இதற்கு அனைத்து அலுவலர்களும், வணிகர்களும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு பேசினார். முன்னதாக கலெக்டர் தலைமையில் அனைவரும் புகையிலை பொருள் ஒழிப்பு உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.

Related Stories: