தமிழ்நாட்டிற்கு மேலும் 1.20 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை!: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பி வைப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டிற்கு மேலும் 1.20 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தன. தமிழகத்தில் கொரோனா 2ம் அலையானது திமுக அரசின் நடவடிக்கையால் தற்போது பெருமளவு குறைய தொடங்கியுள்ளது. ஆனால் கொரோனா 3வது அலை வெகுவிரைவில் தொடங்கி பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் குழு எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் அதிலிருந்து தப்பிக்க 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 2 டோஸ்களையும் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதையடுத்து தமிழக அரசு,  மக்கள் அனைவரையும் கட்டாயமாக தடுப்பூசி போடும் படி அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனர். சில இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதால் தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்படுகிறது. மக்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசானது கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் தமிழக அரசும் ஒன்றிய அரசிடம் தடுப்பூசி குறித்து வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்நிலையில் நேற்று புனேவில் உள்ள ஒன்றிய மருந்து கிடங்கில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஒன்றிய சுகாதாரத்துறை விடுவித்தது. புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்த தடுப்பூசி மருந்து பார்சல்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அவற்றை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: