கலவை- சென்னசமுத்திரம் சாலையில் சாலை ஆக்கிரமிப்பால் பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து-1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

கலவை :  கலவை- சென்னசமுத்திரம் சாலையில் சாலை ஆக்கிரமிப்பால் அரசு பேருந்து பள்ளத்தில் இறங்கியது. இதனால், 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம், கலவை- சென்னசமுத்திரம் சாலையில் பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், அம்மன் கோயில்கள் உள்ளது.

இந்த வழியாக திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுக்கு பேருந்து, லாரி, வேன், சரக்கு வாகனம், கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் அதிகம் செல்கின்றன. இதனால், மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், சாலையின் இருபுறமும்  உள்ள கடைகளில் மேல்புறத்தில் சிமென்ட் சீட்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சாலையோரங்களில் உள்ள கடைகள் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். இதனால், பேருந்துகள் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறது.

இந்நிலையில், நேற்று செய்யாறில் இருந்து கலவை  நோக்கி அரசு  பேருந்து வந்தது. அப்போது, எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக அரசு பேருந்து ஒதுங்கியபோது அருகில் இருந்த  பள்ளத்தில் பேருந்து இறங்கியது.பின்னர், ஜேசிபி இயந்திரம் உதவியுடன் மூலம் பேருந்தை பள்ளத்தில் இருந்து தூக்கப்பட்டது.   இதனால், அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் பல வருடங்களாக நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நெரிசலை தவிர்ப்பதற்காக   சாலையில் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: