பாணாவரத்தில் விபத்து நடந்த புதிய கல்வெர்ட்டு பகுதியில் சாலை சீரமைப்பு-வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

பாணாவரம் : ராணிப்பேட்டை மாவட்டம்,  பாணாவரம்-சேந்தமங்கலம் சாலையில் சில மாதங்களுக்கு முன் பல்வேறு இடங்களில் சாலையின் குறுக்கே கல்வெர்ட்டுகள் அமைக்கப்பட்டது.

பாணாவரம் முத்துமாரியம்மன் கோயில் அருகே 2 கல்வெர்ட்டுகள் அமைக்கப்பட்டது.  

அப்பகுதியில் சாலை சமநிலை இல்லாமல் மேடு, பள்ளமாக இருந்ததால், பைக் உள்ளிட்ட வாகனங்களில் வரும் பெண்கள்,  குழந்தைகள், முதியோர் உள்ளிட்டோர் அடிக்கடி விபத்தில் சிக்கி  காயம் ஏற்படுவது வாடிக்கையாக இருந்தது. இதுகுறித்து, பொதுமக்களின் புகாரின்பேரில், சுடுகாட்டிலிருந்து எலும்புக்கூடு கலந்த மண் குவியல்கள் அப்பகுதியில் கொட்டப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததின்பேரில், சுகாதாரமற்ற கழிவுகள் கலந்த மண் குவியல்கள் உடனடியாக அகற்றப்பட்டது.

இந்நிலையில், கல்வெர்ட்டு பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பள்ளமான பகுதியில் லாரிகள் மூலம் எடுத்து வரப்பட்ட, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. மேலும் நேற்று இயந்திரங்கள் மூலம் தார் ஊற்றி சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. சாலை ஆய்வாளர் ஜானகிராமன் முன்னிலையில் நடைபெற்ற இப்பணியில்,10க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். விபத்துகள் அடிக்கடி நடந்த இப்பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Related Stories:

>