வேலூர் சத்துவாச்சாரி பகுதி 3ல் கழிவு நீரோடையாக மாறிய குடியிருப்பு சாலைகள்-பொதுமக்கள் கடும் அவதி

வேலூர் : வேலூர் சத்துவாச்சாரி பகுதி 3ல் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகள் கழிவு நீர் ஓடும் ஓடையாக மாறி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியிருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.வேலூர் சத்துவாச்சாரியில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் பகுதி 1 முதல் பகுதி 5 வரை பாதாள சாக்கடை கட்டமைப்புகளுடன் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அதேநேரத்தில் குடியிருப்புகளின் நடுவே வீட்டுமனைப்பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டன. இந்த மனைப்பிரிவுகளுக்கு பாதாள சாக்கடை கட்டமைப்பு ஏதும் ஏற்படுத்தப்படவில்லை.

இத்தகைய பாதாள சாக்கடை கட்டமைப்புகளும் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டவை. மேலும் இதற்கான கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகளும் அப்போதைய மக்கள் நெருக்கத்துக்கு ஏற்ப ஏற்படுத்தப்பட்டவை. தற்போதைய மக்கள் பெருக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாதாள சாக்கடை கட்டமைப்புகள் ஆங்காங்கே தூர்ந்தும், அடைப்பு ஏற்பட்டும் பெரும்பாலான குடியிருப்புகளில் கழிவுநீர் சாலைகளில் ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மாநகராட்சியில் இணைந்த பகுதிகளில் பாதாள சாக்கடை கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் கூறி வருகிறது. அதுவரையில் ஏற்படும் கழிவுநீர் பிரச்னைக்கும், சுகாதார சீர்கேட்டுக்கும் என்ன தீர்வு? என்பதே வீட்டு வசதி வாரிய பகுதிகளில் வாழும் மக்களின் கேள்வியாக உள்ளது.

குறிப்பாக பகுதி-3ல் இப்பிரச்னை மக்களை பெரிதும் அவதிக்குள்ளாக்குவதாக வேதனை குரல்கள் எழுந்துள்ளன.

இதில் அரசு போக்குவரத்துக்கழகத்தின் சமுதாய கூடமும், சத்துவாச்சாரி விரிவு தபால் நிலைய கிளை அலுவலகமும் அமைந்துள்ள சாலைகளில் கழிவுநீர் ஓடி அச்சாலைகளை கழிவு நீரோடைகளாகவே மாற்றியுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, சத்துவாச்சாரி பகுதி-3ல் டபுள்ரோடு, அதையொட்டியுள்ள சமுதாய கூடம், தபால் அலுவலகம் அமைந்துள்ள வீதிகள், பிஎப் அலுவலக சாலை என பல்வேறு சாலைகளில் ஓடும் கழிவுநீர் பிரச்னைக்கு மாநகராட்சி தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: