திண்டுக்கல் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை தீவிரம்-போதிய விலை கிடைக்காததால் கவலை

திண்டுக்கல் :  திண்டுக்கல்லை  சுற்றியுள்ள கோவில்பட்டி, கோனூர், பாலராஜக்காபட்டி, முத்தனம்பட்டி  உள்ளிட்ட பகுதிகளில் வெங்காயம் பயிரிடப்பட்டு, தற்போது அறுவடை செய்யப்பட்டு  வருகிறது. அனைத்து பகுதிகளிலும் ஒரே சமயத்தில் இப்பணி நடந்து வருவதால்  கூலி ஆட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ளது. இதனால் விவசாய  தொழிலாளர்களுக்கு அதிக கூலி தரும் நிலை ஏற்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட  வெங்காயம் திண்டுக்கல், ஒட்டன்சத்தரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு  செல்லப்படுகிறது.

இதற்கிடையே கர்நாடகா மாநிலம் பெங்களூர், மைசூர்  பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதனால் சின்னவெங்காயம் விலை நாளுக்குநாள் குறைந்து கொண்டு வருகிறது. கடந்த  வாரங்களில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.35 முதல் ரூ.45 வரை விற்பனையானது.  ஆனால் தற்போது பெங்களூர், மைசூர் வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ சின்ன  வெங்காயம் ரூ.25 வரையே விற்பனையாகிது. இதனால் விவசாயிகள்  கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து கோவில்பட்டியை சேர்ந்த வெங்காய  விவசாயி சண்முகவேல் கூறுகையில், ‘சின்னவெங்காயம் 60 நாள் பயிராகும். ஒரு  ஏக்கா் நடவுக்கு 600 கிலோ விதை சின்ன வெங்காயம் தேவைப்படுகிறது. 4 முறை  உரம், மருந்து, நடவு, களையெடுப்பு, பராமரிப்பு,  அறுவடை, கூலி என மொத்தம்  ரூ.1 லட்சம் செலவாகிறது. இதில் விவசாய தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக   ரூ.400 தர வேண்டியுள்ளது. மேலும் கூலிக்கு ஆள் கிடைப்பதில் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது. சின்ன வெங்காயம் ரகம் ஒரு கிலோ ரூ.24 முதல் ரூ.26 வரை  கொடுத்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். பயிா் சாகுபடிக்கு போட்ட  முதலீட்டு தொகை கிடைத்தாலே போதும் என்ற நிலைக்கு விவசாயிகள்  தள்ளப்பட்டுள்ளனர்’ என்றார்.

Related Stories:

>