ஷட்டர் உடைப்பால் கோம்பை டேம் தண்ணீர் முழுவதும் வீண்

*20 கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

*குடிமராமத்து பணி முறைகேடே காரணம் என குற்றச்சாட்டு

சின்னாளபட்டி : கோம்பை அணையில் ஷட்டர் உடைப்பால், தண்ணீர் முழுவதும் வீணாக வெளியேறி 20 கிராமங்களுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது. குடிமராமத்து பணியில் ஷட்டரை முறையாக பழுது நீக்காததே இச்சம்பவத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ரெட்டியார்சத்திரம்  ஒன்றியம், டி.பண்ணைப்பட்டி ஊராட்சிக்குட்பட்டது கோம்பை அணை. சுமார் 70  ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில்  இருந்து நீராதாரம் கிடைக்கிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால்  அணை நிரம்பி 45 கனஅடி உயரம் தண்ணீர் இருந்தது.

கடந்தாண்டு அதிமுக  ஆட்சியில் இந்த அணையின் குடிமராமத்து பணிக்காக ரூ.25 லட்சம் ஒதுக்கீடு  செய்யப்பட்டது. ஆனால் நீர்வரத்து பாதைகளை சரியாக தூர்வாராததால் அணைக்கு  முறையாக தண்ணீர் வரவில்லை. குறிப்பாக குடிமராமத்து பணியில் மதகு ஷெட்டரை  முறையாக பழுது நீக்காததால் அணையின் நீர் வெளியேறி வந்தது. இந்நிலையில்  நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் அணையின் ஷட்டரை உடைத்து தண்ணீரை  வெளியேற செய்து விட்டு சென்று விட்டனர்.

இதனால் அணையில் உள்ள தண்ணீர்  முழுவதும் வீணாக வெளியேறியது. இந்த அணை நீர் மூலம் சுமார் 20 கிராமங்களில்  குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது அணையில் தண்ணீர் இல்லாததால்  குடிநீர் விநியோகம் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து  பண்ணைப்பட்டியை சேர்ந்த ஜெகநாதன் கூறுகையில், ‘கடந்த ஆண்டு கோம்பை அணை 3  முறை நிரம்பி வழிந்தது. குடிமராமத்து பணியின் போது ஷட்டரை முறையாக பழுது  நீக்கியிருந்தால் இதுபோல் சம்பவம் நடந்திருக்காது. தற்போது விஷமிகள் செய்த  சதியால் அணை தண்ணீர் முழுவதும் வீணாகி விட்டது. இதனால் 20 கிராமங்களில்  தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அணை  ஷட்டரை பழுது நீக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories:

>