காரையாறு சொரிமுத்தையனார் கோயில் ஆடி அமாவாசை விழாவில் பக்தர்களுக்கு அனுமதி?

வீரவநல்லூர் : காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து கலெக்டர் முடிவெடுத்து அறிவிக்க உள்ளதாக சேரன்மகாதேவி சப்.கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். இந்துக்களின் முக்கிய விரத தினங்களில் ஒன்றான ஆடி அமாவாசை அன்று பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் திருவிழா நடைபெறும். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வர்.

பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான வாகனங்களில் வரும் பக்தர்கள், காரையாறு வனப்பகுதியிலேயே குடில் அமைத்து தங்கி விரதமிருந்து நேர்த்திக் கடன் செலுத்துவர். கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 2020ம் ஆண்டு ஆடி அமாவாசையன்று பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்தாண்டும் ஊரடங்கு அமலில் உள்ள போதும் தொற்று பரவல் குறைவால் அரசு பல்வேறு தளர்வுகளை அமல்படுத்தி உள்ளது. குறிப்பாக கோயில்களில் அன்றாட பூஜைகளுக்கும், தனித்தனியாக பக்தர்கள் வழிபடவும் அனுமதி அளித்து உள்ளது.  இந்நிலையில் இந்தாண்டுக்கான ஆடி அமாவாசை தினமான வரும் ஆகஸ்ட் 8ம் ேததி காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் திருவிழாவை நடத்துவது மற்றும் இதில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து சேரன்மகாதேவியில் சப்.கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

பின்னர் இதுகுறித்து சப்.கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பொது முடக்கத்தில் சில தளர்வுகள் உள்ளதால் கோயிலில் சென்று தனி நபர்கள் வழிபட தற்போது அனுமதியுள்ளது. ஆனால் ஆடி அமாவாசையன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவதால் அது கொரோனா  பரவலுக்குக் காரணமாகி விடக்கூடாது என்பதற்காக மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் குறித்து வனத்துறை, காவல்துறை, அறநிலையத்துறை, வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

 இதுகுறித்து கலெக்டரிடம் அறிக்கை வழங்கப்படும். திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பது மற்றும் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் குறித்த அறிவிப்பை கலெக்டர் விரைவில் முடிவெடுத்து வெளியிடுவார்’’ என்றார்.  கூட்டத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் செண்பக ப்ரியா, அம்பாசமுத்திரம் காவல்துணைக் கண்காணிப்பாளர் பிரான்சிஸ், தாசில்தார் வெற்றிச்செல்வி, அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் வெங்கடேஷ், ஜெகநாதன், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் காஞ்சனா, சுகாதார மேற்பார்வையாளர் கணேசன், வனச்சரகர்கள் பரத், சரவணக்குமார் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: