நிலக்கோட்டை அருகே கண்மாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள்-சரணாலயம் அமைக்க கோரிக்கை

ஒட்டன்சத்திரம் : நிலக்கோட்டை அருகே மீனாட்சிபுரம் பெரியகுளம் கண்மாய்க்கு வெளிநாட்டு பறவைகள் அதிகம் வருவதால், இக்கண்மாயில் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஒட்டன்சத்திரத்தில்  பறவைகளை பற்றி ஆய்வு செய்து வரும் அனதர் பேஜ் பார் சொசைட்டியின்  இயக்குனர்கள் குமார்,  முத்துலட்சுமி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில்  கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் சத்திரப்பட்டி, பழநி  சண்முகநதி, குன்னுவாரன்கோட்டை மீனாட்சிபுரம் பெரியகுளம் கண்மாய் பகுதிக்கு  ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பறவைகள் உணவு, இனவிருத்திக்காகக ஐரோப்பிய  கண்டங்களில் இருந்து வருகின்றன. இதில் நிலக்கோட்டை அருகே குன்னுவாரன்கோட்டை மீனாட்சிபுரம் பெரியகுளம் கண்மாயில்  உள்நாட்டு பறவைகளும் நூற்றுக்கணக்கில் தங்கியிருந்து இனவிருத்தி  செய்கின்றன.

68.50 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள  இக்கண்மாயில் இதுவரை  109 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில்  இப்படி ஒரே இடத்தில் இவ்வளவு பறவைகள் பதிவு செய்யப்பட்டது இதுதான்  முதன்முறை. புள்ளி மூக்கு வாத்துகள், முக்குளிப்பான்கள், நத்தை கொத்தி  நாரைகள், பெரிய, சிறிய, நடுத்தர நீர்க்காகங்கள், பாம்பு தாராக்கள்,  அன்றில்கள், நீலத்தாழை கோழிகள், சங்குவளை நாரைகள், கூழைக்கடாக்கள், உண்ணி  கொக்குகள், குருட்டு  கொக்குகள், சிறிய, நடுத்தர, பெரிய கொக்குகள் போன்ற  நீர்ப்பறவைகள் நூற்றுக்கும் அதிகமாக இங்கு காணப்படுகின்றன.

மேலும்  உள்ளான்கள், பொரி உள்ளான்கள், சாம்பல் வாலாட்டிகள், மஞ்சள் வாலாட்டிகள்,  கடல் ஆலாக்கள், சூரமாரிகள், ஊசிவால் வாத்துக்கள், பச்சைக்காலிகள், பழுப்பு  கீச்சான்கள் போன்ற வெளிநாட்டு பறவைகளும் மீனாட்சிபுரம் பெரியகுளம்  கண்மாய்க்கு  வருகின்றன. இக்கண்மாயின் சிறப்பே கண்மாயின் உள்ளே  அமைந்திருக்கிற நீர்கருவேல மரங்கள்தான். இக்கருவேலமரங்கள் நீர்ப்பறவைகள்  இளைப்பாறவும், இனவிருத்தி செய்யவும் மிகவும் உதவுகின்றன. இதனால்  குன்னுவாரன்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களை ஒட்டி சிறிய குன்றுகள்,  உடும்புகள், கீரிகள், முயல்கள், பல்வேறு வகையான வண்ணத்து பூச்சிகள்,  பாம்புகளை கொண்டு பல்லுயிர்ச்சூழல் சம நிலையை அடைய உதவி புரிகிறது.

இத்தனை  சிறப்புமிக்க மீனாட்சிபுரம் பெரியகுளம் கண்மாய் திண்டுக்கல் சமூக  வனக்கோட்டத்திற்குட்பட்டு உள்ளது. பறவைகள் இனப்பெருக்கம் செய்கிற காலத்தில்  29.4.2021 முதல் 31.8.2021 வரை 452 மெட்ரிக் டன் அளவிற்கு மரங்கள்  வெட்டிக் கொள்ள வனத்துறை அனுமதித்துள்ளது. அதன்படி அக்கண்மாயின் பல்லுயிர்  முக்கியத்துவம் அறியாமல் கண்மாயில் உள்ள அனைத்து மரங்களும் வெட்டப்பட்டு  விட்டன.

உலகளவில் அழிந்து வரும் பறவைகள் பற்றி அறிக்கை மற்றும் பட்டியல்  அளித்து வரும் நிறுவனமான ஐ.சி.யு.என். சிகப்பு பட்டியலில், மிக வேகமாக  அழிந்து வரும் பிளாக் ஹெக்டேட் ஐபிஐஎஸ், பெயின்டடு ஸ்டோர்க், ஸ்பாட் பில்டு  பெலிக்கன், ஓரியன்டல் டார்ட்டடு, ஊலிநெக்கட் ஸ்டோர்க் ஆகியவாகும். மேற்படி  பறவைகளை பாதுகாக்கும் பொறுப்பு மனிதர்களுக்கே உள்ளது. ஏனென்றால்  மனிதர்களின்றி பறவைகளால் வாழ முடியும். ஆனால் பறவைகள் இன்றி மனிதர்களால்  வாழ முடியாது எனும் பறவை அறிஞர் சாலிம் அலியின் கூற்று எவ்வளவு மகத்தானது.  

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் எனும் வள்ளுவரின் வாக்கும் மெய்சிலிர்க்க   தக்கவை. ஆகவே தமிழக வனத்துறை அழகிய மீனாட்சிபுரம் பெரியகுளம் கண்மாயை  உடனடியாக பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து மரங்கள் வெட்டுவதை தடை  செய்வதுடன், பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: