அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை-திருவாரூர் கலெக்டர் எச்சரிக்கை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா போன்ற பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் காயத்திரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை போன்ற பொருட்களை ஏற்பது குற்றம் எனவும் இந்த பொருட்கள் மூலம் தீமை ஏற்படுகிறது எனவும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அலுவலர்கள் மற்றும் வர்த்தக நிறுவனத்தினர் கலந்துகொண்டு உறுதிமொழியை ஏற்றனர். அப்போது உணவு வணிகராகிய நான் தமிழக அரசின் உத்தரவின்படி தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டின் சேர்க்கப்பட்ட பொருளாக கொண்ட குட்கா, பான் மசாலா மற்றும் மெல்லும் புகையிலை பொருட்களை உபயோகப்படுத்தும் பொழுது வாய்புண், குடல் புண் மற்றும் புற்றுநோய் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படும் எனவும் இறுதியாக உயிர் இழப்பை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொண்டேன்.

ஆகையால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டின் சேர்க்கப்பட்ட பொருட்களை தயாரிக்கவோ, வாகனங்களில் எடுத்துசெல்லவோ, விநியோகிக்கவோ, சேமிக்கவோ மற்றும் விற்பனை செய்யவோ மாட்டேன் எனவும் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொது மக்கள் நலன் காத்திட நானும் எனது நிறுவனத்தை சார்ந்த பணியாளர்களும் ஒத்துழைத்து உணவு வணிகம் புரிவோம் என்ற உறுதிமொழியினை ஏற்று கொண்டனர்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது, தமிழக அரசின் உத்தரவின்படி திருவாரூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்களை வைத்திருப்பதும், விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை உபயோகிக்கப்படுத்தும்போது வாய்புண், குடல் புண் மற்றும் புற்றுநோய் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்பட்டு இறுதியாக உயிரிழப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை சேமித்து வைத்திருப்பது மற்றும் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் ரூ.5 ஆயிரம் வரையில் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படும்.

மேலும், மாவட்டத்தில் குட்கா, பான் மசாலா விற்பனை செய்வது தெரியவந்தால் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இவ்வாறு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறையின் நியமன அலுவலர் டாக்டர் சவுமியா சுந்தரி, அலுவலர்கள் அன்பழகன், கர்ணன், திகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், வணிக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: