வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்படுகிறதா?: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி..!!

சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்படுகிறதா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நிலுவையில் இருந்து ஒரு வாரத்தில் விசாரணைக்கு பதிவிடப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்திருந்தது. தொடர்ந்து இந்த கல்வியாண்டு முதல் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதாக நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. அதில், 10.5% உள் இட ஒதுக்கீடு சட்டத்தால் விளிம்புநிலை மக்கள் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. அச்சமயம் நீதிபதிகள், வழக்கு நிலுவையில் இருந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் அரசாணை நேற்று வெளியிடப்பட்டிருக்கிறது. எனவே இட ஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்படுகிறதா? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக இன்று மதியம் 2:15 மணிக்கு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்டதால் இன்று மதியமே தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதற்கு அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இன்று மதியம் 2:15 மணிக்கு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது அரசின் நிலைப்பாடு என்ன என்பது முழுமையாக தெரியவரும். வழக்கு நிலுவையில் உள்ள போது ஏன் அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு முழுமையாக தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: