இளையான்குடியில் பருத்தி பஞ்சு விலை மீண்டும் உயர்ந்தது-கிலோ ரூ.51க்கு கொள்முதல்

இளையான்குடி : இளையான்குடியில் பருத்தி பஞ்சு விலை மீண்டும் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சாலைக்கிராமம், வடக்கு சாலைக்கிராமம், சமுத்திரம், கோட்டையூர், துகவூர், கரும்புகூட்டம், விரையாதகண்டன், சாத்தனூர், அளவிடங்கான், வண்டல் ஆகிய பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது கடும் வெப்பம் நிலவி வருவதால், முற்றிய பருத்தி காய்கள் அனைத்தும் வெடித்து வெளிவரும் பஞ்சை விவசாயிகள் பறித்து வருகின்றனர். அவ்வாறு பறித்து வரும் பஞ்சை தரம்பிரித்து, இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதியில் உள்ள கமிஷன் கடையில் விற்பனை செய்து வருகின்றனர்.

ஜூன் முதல் வாரத்தில் கிலோ ரூ.53க்கு கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி பஞ்சு, ஜூன் 16ம் தேதி நிலவரப்படி ரூ.56க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மேலும் ஜூலை முதல் வாரத்தில் ஒரு கிலோ ரூ.58க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பருத்தி பஞ்சு விலையேற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் ஜூலை 10ம் தேதிக்கு பிறகு ரூ.51, ரூ.45 என படிப்படியாக பஞ்சு விலை குறைந்தது. தொடர்ந்து ஒரு வாரமாக பருத்தி பஞ்சு விலை சரிந்ததால் இளையான்குடி, சாலைக்கிராமம், சூராணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் உரிய விலையில்லாமல் கவலையடைந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று பஞ்சு விலை திடீரென உயர்ந்தது. சாலைக்கிராமம், இளையான்குடி பகுதியில் ஒரு கிலோ பருத்தி பஞ்சை ரூ.51க்கு விவசாயிகளிடமிருந்து தனியார் கமிஷன் கடை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஒரு வாரத்திற்கு பிறகு பஞ்சு விலை உயர்ந்ததால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: