சாலைக்கிராமம் அரசு மேல்நிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டும்-தமிழரசி எம்எல்ஏ.விடம் மக்கள் கோரிக்கை

இளையான்குடி : சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டும் என, எம்எல்ஏ தமிழரசியிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இளையான்குடி ஒன்றியத்திலேயே சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளி முதல் முதலாக 1961ல் தொடங்கப்பட்டது. சுமார் ஆயிரத்து 200 மாணவ, மாணவிகளுடன் பள்ளி சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால் அதிமுக ஆட்சியில் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாததால் பள்ளியில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை பாதியளவு குறைந்தது.

போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. பள்ளியில் ஆய்வு கூடம் இல்லாததால் அறிவியல் பிரிவு மாணவ, மாணவிகள் பரிதவிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அதனால் சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் அறிவியல் ஆய்வு கூடம் கட்ட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ஆய்வு செய்தார். எம்எல்ஏ தமிழரசியிடம் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமாறு கோரிக்கை விடுத்தனர்.

பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்த எம்எல்ஏ தமிழரசி, இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆய்வின் போது பள்ளி தலைமையாசிரியர் ஜோஸ்பின் லதா, ஒன்றியச் செயலாளர் செல்வராசன், நகரச் செயலாளர் நைனாமுகமது, இலக்கிய அணி கஸ்பார், தகவல் தொழில்நுட்ப அணி தமிழ்வாணன், திலகர், குணசேகரன், கணபதி, ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: