குஜராத்தில் உள்ள ஹரப்பா நகரான தோலாவிரா-வை உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ : பிரதமர் மோடி மகிழ்ச்சி

டெல்லி : இந்தியாவில் உள்ள ஹரப்பா நகரான தோலாவிராவை உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்ததற்கு பிரதமர் நரேந்திர  மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  இது கண்டிப்பாக காணவேண்டிய இடம், குறிப்பாக வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியலில் ஆர்வமுள்ளவர்கள் காண வேண்டிய இடம் என அவர் கூறியுள்ளார்.

யுனெஸ்கோவின் சுட்டுரைக்கு, பதில் அளித்த பிரதமர் கூறியிருப்பதாவது: ‘‘இந்த செய்தியால் முற்றிலும் மகிழ்ச்சியடைந்தேன்.

தோலாவிரா முக்கியமான நகர்ப்புற மையமாக இருந்தது. நமது பழங்காலத்துடன் மிக முக்கிய தொடர்புகளைக் கொண்டவைகளில் ஒன்றாக உள்ளது. இது கண்டிப்பாகக் காண வேண்டிய இடம், குறிப்பாக வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு.

மாணவப் பருவத்தில், நான் முதன் முதலாக தோலாவிரா சென்றேன். அந்த இடம் என் மனதைக் கவர்ந்தது.

குஜராத் முதல்வராக, தோலாவிராவை பாரம்பரிய இடமாகப் பாதுகாப்பது மற்றும் புனரமைப்பது தொடர்பானப் பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பை பெற்றேன்.  இங்கு சுற்றுலாவுக்கு ஏற்ற உள்கட்டமைப்புகளை உருவாக்க நமது குழுவும் பணியாற்றியது.’’ என்று தெரிவித்துள்ளார்.

தோலாவிரா

குஜராத்தில் ஒரு கீழடி என போற்றத்தகுந்த வகையில் தோலாவிராவின் கட்டுமானங்கள் நம் முன்னோர்களான சிந்துசமவெளி மக்களின் வாழ்வியலை இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. தோலாவிரா என்பது சதுப்புநிலமாக பாலைவனமாக விரிந்து பரந்து கிடக்கும் குஜராத்தின் ரான் ஆப் கட்ச் என்ற பகுதியின் நடுவே இருக்கிறது.தோலாவிராவின் மிகப் பெரிய ஆச்சரியமே பிரமாண்ட நீர் சேமிப்பு கட்டமைப்புதான். தோலாவிரா நகரத்தின் கட்டமைப்பு இன்றைய நவீனத்தைவிட மிக அற்புதமானதாக திட்டமிட்டு கட்டப்பட்டிருக்கிறது. சிந்துசமவெளி மக்கள் எப்படியான உச்சநிலை பண்பாட்டில் வாழ்ந்தனர் என்பதை பாலைவனத்துக்கு நடுவே சாட்சியமாக நின்று சொல்கிறது இந்த தோலாவிரா.

Related Stories: