உ.பி.யில் பயங்கரம்!: பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 கூலித்தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு..!!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பேருந்து மீது லாரி ஏறிய விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் பல்வாலில் இருந்து பீகார் நோக்கி வால்வோ பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பீகாரின் தர்பாங்கா, சித்தார்பங்கீ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக கூலி தொழிலாளர்கள் 140 பேர் இந்த பேருந்தில் பயணித்தனர். உத்திரப்பிரதேச மாநிலம் பாராபங்கி பகுதியில் அயோத்தி லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த சரக்கு லாரி ஒன்று பயங்கர வேகத்தில் மோதியது.

இதில் நிலைதடுமாறிய பேருந்து சிறிதுதூரம் இழுத்து செல்லப்பட்டு சாலையோரம் நின்றது. பேருந்தின் பின்பகுதி முற்றிலுமாக நொறுங்கியது. இந்த விபத்தில் 18 கூலித்தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 19 பேர் படுகாயமடைந்தனர். காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு லக்னோ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: