×

ஆபாச படங்களை அனுப்பி வைக்கும்படி இன்ஸ்டாகிராமில் மாணவிக்கு மிரட்டல்: 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலை

ஆவடி: ஆபாச படங்களை அனுப்பி வைக்கும்படி இன்ஸ்டாகிராமில் மாணவிக்கு மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறாள். இதற்கிடையில், மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அசாருதீன், கண்ணன் ஆகியோரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இவள் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகவல்கள் பரிமாறி கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் மாணவியிடம் ஆபாச படம் எடுத்து அனுப்பும்படி மிரட்டி உள்ளனர். இதனால், பயந்துபோன மாணவி தனது ஆபாச படத்தை எடுத்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

இதனை பார்த்தவுடன் அவர்கள் மீண்டும் இதேபோல் பல படங்களை அனுப்பிவைக்கும்படி மாணவியிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு, மாணவி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் இருவரும் இணையதளங்களில் ஆபாச படங்களை வெளியிடுவதாக மாணவிக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மேலும், பயந்து போன மாணவி பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்து அழுது புலம்பினாள். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களை தேடுகின்றனர்.


Tags : Pornography, Instagram, Student, Youth, Police
× RELATED வாகன விபத்தில் 2 வாலிபர்கள் பலி