திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தவறான ஊசி செலுத்தியதால் பெண் பலி: உறவினர்கள் புகார்; நர்ஸ் சஸ்பெண்ட்

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் செவிலியர் தவறான ஊசி போட்டதால் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.  திருவாலங்காடு ஒன்றியம் சின்ன களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப்(27). கூலி தொழிலாளி.  இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வனிதா 2வது குழந்தைக்காக கடந்த 20ம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அப்போது அவருக்கு ஒரு ஊசி செலுத்தப்பட்டது. அந்த ஊசி செலுத்தியவுடன் வனிதாவுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வலிப்பு வந்து மயங்கி விழுந்துள்ளார். அப்போது அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து மருத்துவர்கள் 30 மணி நேரம் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததன்பேரில் அதிலிருந்து மீண்டார்.

பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. 2 தினங்கள் கழிந்த நிலையில் நேற்று தாயும், குழந்தையும் நலமாக இருந்தனர். அப்போது, செவிலியர் மணிமாலா என்பவர் ஏற்கனவே அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்ட அதே ஊசியை செலுத்த வந்ததாகவும் அதற்கு வனிதா தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், `இந்த ஊசி போட்டால் தான் உனக்கு உடல் நலம் சீராகும்,’ என கூறி செவிலியர் மணிமாலா அந்த ஊசியை வனிதாவுக்கு செலுத்தியதாக தெரிகிறது. ஊசி செலுத்திய 2 நிமிடத்தில் மீண்டும் வனிதா மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவர்கள் அவரை பரிசோதித்து அவர் அபாய கட்டத்தில் உள்ளார் என ஆம்புலன்ஸ் மூலம் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி வனிதா உயிரிழந்தார். இந்நிலையில், அவரது கணவர் பிரதீப் மற்றும் உறவினர்கள், செவிலியர் தவறான ஊசி செலுத்தியதால் தான் வனிதா உயிரிழந்தார். எனவே செவிலியர் மணிமாலா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து மேலும் இதுபோன்ற சம்பவம் வேறு யாருக்கும் நடைபெறாமல் இருக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்பி ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தனர்.  இதனையடுத்து, செவிலியர் மணிமாலாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: