ஆவடி தாலுகாவில் 303 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஆவடி நாசர் வழங்கினார்

ஆவடி: ஆவடி தாலுகா அலுவலகத்தில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அங்குள்ள வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். முன்னதாக ஆவடி தாசில்தார் செல்வம் அனைவரையும் வரவேற்றார்.  நிகழ்ச்சியில், ஆவடி தொகுதி எம்எல்ஏவும்,  தமிழக பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு 303 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க வந்தபோது மக்களின் குறைகளை மனுக்களாக பெற்றார்.  தற்போது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அதனை ஆய்வு செய்ய தனி அதிகாரியை நியமித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

அதன் அடிப்படையில், பெறப்பட்ட மனுக்களை ஆட்சி பொறுப்பை ஏற்று 100 நாட்களுக்குள் தீர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, நேற்று 230 பயனாளிகளுக்கு பட்டா, 51 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியத்திற்கான ஆணை, 22 பயனாளிகளுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஒருங்கிணைந்த சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட 303 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.  இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு பருத்திப்பட்டு கிராமத்தில் 320 பயனாளிகளுக்கு, திருமுல்லைவாயல் கிராமத்தில் 120 பயனாளிகளுக்கும், கலெக்டர் அலுவலகத்தில் 165 பயனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டாக்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு முதல்வர் ஆணையை ஏற்று மக்கள் பயனடையும் வகையில்,  நமது மாவட்டத்தில் பல நலத்திட்டங்கள் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.  இந்நிகழ்ச்சியில், ஆவடி தனி வட்டாட்சியர்கள் மணிகண்டன், வில்சன், திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஜெ.ரமேஷ், ஆவடி மாநகர செயலாளர்கள் ஜி.ராஜேந்திரன், ஜி.நாராயணபிரசாத், பேபி சேகர், பொன்.விஜயன், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் எஸ்.மூர்த்தி, வழக்கறிஞர்கள் புரட்சிதாசன், ரவிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>