×

தாய்மாமன் கொலை வழக்கில் திடீர் திருப்பம் `என் அம்மாவை பற்றி தவறாக பேசியதால் கொலை செய்தேன்’: கைதான மைத்துனர் பரபரப்பு வாக்குமூலம்

செங்கல்பட்டு: உத்திரமேரூர் அடுத்த மானாமதி இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளி(25). கூலி தொழிலாளி. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 4 மாத கை குழந்தை உள்ளது. முரளி மீது உத்திரமேரூர், சாலவாக்கம், காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 25ம் தேதி செங்கல்பட்டு அடுத்த அமணம்பாக்கம் இருளர் பகுதியில் உள்ள மாமியார் கன்னியம்மாள் வீட்டிற்கு சென்றார். அப்போது, மீஞ்சூரில் உள்ள தாய்மாமன் தினேஷுக்கு(40) போன் செய்து, `உன்னை பார்க்க வேண்டும். பீர் வாங்கி வைத்துள்ளேன், வா’ என்று கூறியுள்ளார். உடனே தினேஷும், மதியம் பைக்கில் வந்தார். பின்னர் இருவரும் மது அருந்தினர். இதையடுத்து, தனது நண்பர்களையும் மது அருந்த முரளி அழைத்துள்ளார். அவரது நண்பர்களை பார்த்த தினேஷ், `இவர்களை ஏன் அழைத்தாய்’ என்று கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

போதை தலைக்கு ஏறியதும், முரளி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர், தினேஷை அரிவாளால் கழுத்து, தலையில் சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பினர். தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது தினேஷ் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது. சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து அம்மணம்பாக்கத்தை சேர்ந்த முரளியின் நண்பர் பிரசாத்(24) என்பவரை கடந்த 2 தினங்களுக்கு முன் கைது செய்தனர். மேலும், முரளி உள்ளிட்டோரை தேடி வந்தனர்.

இந்நிலையில், வேளச்சேரி பகுதியில் பதுங்கியிருந்த முரளியை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் முரளி அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு: திருமணமானது முதல் என்னை குடிப்பழக்கத்துக்கு ஆளாக்கியவர் தினேஷ். புகையிலை, கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்துக்கு அடிமையாக்கினார். மேலும் பல குற்ற வழக்குகளில் சிக்க வைத்தார். செலவுக்கு பணம் இல்லாததால் திருடும்படி கூறினார். உச்சக்கட்டமாக என் அம்மாவை பற்றி தவறாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த நான், நைசாக போன் செய்து வரவழைத்தேன். பின்னர் நண்பர்களை அனுப்பி ஒரு காஸ் பீர் வாங்கி வந்து விடிய விடிய குடித்தோம். என் அம்மாவை பற்றி பேசிய வார்த்தைகள் என்னை உலுக்கி கொண்டே இருந்தது. அதனால் மதியம் கொலை செய்ய தீர்மானித்தேன்.

எனது நண்பர்கள், தினேஷின் கால்களை பிடித்து கொள்ள அவரது தலையை அறுத்தேன். தலையில் வெட்டினேன். இறந்ததை உறுதி செய்த பின்னர் கதவை பூட்டி விட்டு சென்றோம். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து முரளியை நேற்று காலை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Mother-in-law murder, mother-in-law murder, brother-in-law sensational confession
× RELATED பெண்ணுக்கு கருக்கலைப்பு கணவர், மாமியார் மீது புகார்