ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்: தீர்மானங்கள் நிறைவேற்றம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில், அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாமண்டூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட தலைவர் சு.பரணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ப.குணசேகரன் அறிக்கை சமர்ப்பித்தார். இதில் 100க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  

கூட்டத்தில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அவரது அமைச்சரவைக்கும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட மையம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநில தலைவர் மு.சுப்பிரமணியத்தை,  கடந்த ஆட்சியில் பழிவாங்கும் நோக்கத்தோடு பணியிடை நீக்கம் செய்து ஓய்வு மறுக்கப்பட்டது. அவரது பணியிஇடை நீக்கத்தை ரத்து செய்து, அவருக்கு முறையான பணி ஓய்வு வழங்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் காலியாக உள்ள 2 துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை, பதவி உயர்வின் மூலம் எவ்வித முகாந்திரமும் இன்றி, உடனடியாக நிரப்ப வேண்டும்.

மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில், காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். மாவட்ட ஊரக  வளர்ச்சி அலகில் பணியாற்றும் ஊராட்சி செயலர்களின் பணி மூப்பு பட்டியலை வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி அலகில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் கலந்தாய்வு முறையில் பணி மாறுதல் வழங்க வேண்டும். அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் மாவட்ட துணை தலைவர் வெ.சுதர்சன் நன்றி கூறினார்.

Related Stories:

>