நிரந்தர காய்கறி பந்தல் அமைக்க ரூ.28 லட்சம் மானியம்: தோட்டக்கலை துணை இயக்குநர் அறிக்கை

செங்கல்பட்டு: நிரந்தரமாக பந்தல் அமைத்து கொடி வகை காய்கறிகளை சாகுபடி செய்து 20 முதல் 25 ஆண்டுகள் வரை விவசாயிகள் அதிக லாபம் அடையும் வகையில், ரூ.28 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக,  செங்கல்பட்டு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் சாந்தா சீனிமேரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொடி வகை காய்கறி பயிர்களான பாகற்காய், சுரைக்காய், பீர்க்கன்காய், புடலங்காய், கோவக் காய் போன்ற பயிர்கள் கடந்த நிதியாண்டடில் சுமார் 205 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பயிர்சாகுபடி செய்யும் விவசாயிகள் பொதுவாக நல்ல லாபம் அடைய பந்தல் முறையில் சாகுபடி செய்வது வழக்கம்.

பந்தல் சாகுபடி பலனை 20 முதல் 25 ஆண்டுகள் வரை பெற விரும்பும் விவசாயிகள் கல் அல்லது சிமென்ட் கான்கிரீட் தூண்கள் மூலம் நிரந்தர பந்தல் அமைப்பார்கள். அதுபோல் நிரந்தர பந்தல் அமைக்கும்போது, ஹெக்டேருக்கு சுமார் ரூ.4 லட்சம் வரை ஆரம்ப செலவு  ஆவதால் தமிழக அரசு 50 சதவீதம், அதாவது ஹெக்டேருக்கு ரூ.2 லட்சம் மானியமாக வழங்குகிறது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2021 - 22 நிதியாண்டில், விவசாயிகளுக்கு நிரந்தர பந்தல் அமைக்க இம்மாவட்டத்துக்கு ரூ.28 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மானியம் பெற விரும்பும் விவசாயிகள், உழவன் செயலி மூலமாகவும், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து பயன் பெறலாம்.

 பின்னேற்பு மானியமாக மானியம் வழங்கப்படுவதால், முதலில் வேண்டிய நில ஆவண நகல்களுடன் விருப்ப கடிதத்தை வட்டார அலுவலகங்களில் முதலில் வழங்கி, பணி ஆணை பெற்று, 90 நாட்களில் பணி நிறைவுற்ற பின்பு கள ஆய்வு மேற்கொண்டு பிறகு,  மானியம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பப்படும். மானியம் பெற விரும்பும் விவசாயிகள், அச்சிறுப்பாக்கம், காட்டாங்கொளத்தூர்:  சிறியதுரை- 96002 24217, சிட்லபாக்கம், மதுராந்தகம்: பாலகுமார்- 99402 07622, சித்தாமூர், பவுஞ்சூர்: பிரியங்கா 94883 60501, திருக்கழுக்குன்றம், திருப்போரூர்: சாகுல்ஹமீது 9442257514 ஆகிய வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: