பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் நீதிபதி தலைமையில் விசாரணை மூத்த பத்திரிகையாளர்கள் மனு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

புதுடெல்லி: செல்போன் ஒட்டு கேட்பு பற்றி  நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில்  மூத்த பத்திரிகையாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் காங்கிரஸ் முன்னாள்  தலைவர் ராகுல் காந்தி, 40 மூத்த பத்திரிகையாளர் உள்ளிட்டோரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக  வெளியான செய்தியால்,  நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இதனால், நாடாளுமன்றம் முடங்கி வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்களான என்.ராம், சசிகுமார் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், ‘பத்திரிகையாளர்கள், வக்கீல்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் என 142 இந்தியர்களின் செல்போன்கள் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

அரசோ அல்லது அதன் ஏதேனும் ஒரு அமைப்போ பெகாசஸ் மென்பொருள் உரிமத்தை பெற்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்த  கண்காணிப்பை நடத்தியதா என்பதை உறுதிபடுத்த, தற்போதைய அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்த ஓரிரு நாளில் விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற குழு இன்று விசாரணை

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இன்று விசாரணை நடத்த உள்ளது. இதுதொடர்பாக குழு முன்பாக ஆஜராகி விளக்கமளிக்க மின்னணு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை குறித்து சசிதரூர் கூறுகையில், ‘‘பெகாசஸ் விவகாரத்தால் நாடாளுமன்றம் முடங்கி உள்ளது.

எனவே இந்த விசாரணை நாடாளுமன்ற குழுவுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஒட்டுகேட்பு குறித்து அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்போம். அவர்களின் பதில் எப்படியிருக்கும் என பார்ப்போம்’’ என்றார். தகவல் தொழில்நுட்ப நிலைக்குழுவில் பாஜ எம்பிக்களே அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: