வன்முறையில் 5 போலீசார் கொல்லப்பட்டதால் பதற்றம் அசாமில் கொந்தளிப்பு: மிசோரம் எல்லையில் 3,000 கமாண்டோ வீரர்கள் பொருளாதார முற்றுகை போராட்டம் அறிவிப்பு

கவுகாத்தி: எல்லை பிரச்னையில் 5 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டதால் அசாம் - மிசோரம் இடையே கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.  அசாம் மாநிலத்தில் உள்ள கச்சார், ஹைலகண்டி, கரிம்கஞ்ச் ஆகிய மாவட்டங்கள் மற்றும் மிசோரம் மாநிலத்தில் உள்ள கோலாசிப், மமித், அய்சால் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே 164.6 கி.மீ எல்லையை இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்கின்றன. இரு மாநிலங்களுக்கும் இடையே 50 ஆண்டுகளுக்கு மேலாக எல்லை பிரச்னை நீடித்து வருவதால், அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே,  ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சனிக்கிழமை ஷில்லாங்கில்  வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்களுடன் எல்லை பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அப்போது, இரு மாநில  முதல்வர்களும் கலந்து ஆலோசித்து எல்லை பிரச்னைக்கு தீர்வு காணும்படி  அறிவுறுத்தினார்.

இந்நிலையில், மிசோரத்தில் 2 நாட்களுக்கு முன் 8  விவசாயிகளின் குடிசைகள் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதைத்  தொடர்ந்து, எல்லையில் அசாம் போலீசார் மீது மிசோரம் மக்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு, கல்வீச்சு  தாக்குதலில் அசாம் போலீசார் 5 பேர், பொதுமக்கள் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். எஸ்.பி உட்பட 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இரு மாநிலங்களிடையே மோதல் வெடித்துள்ளதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக, அசாமில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. மோதலில் கொல்லப்பட்ட அசாம் போலீசாருக்கு மரியாதை செலுத்தும் வகையில், நேற்று முதல் நாளை வரை 3 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும், தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சில்சார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அங்கு சிகிச்சை பெற்று வரும் போலீசாரை சந்தித்து நலம் விசாரித்தார். படுகாயமடைந்த கச்சார் மாவட்ட எஸ்.பி வைபாப் சந்திரகாந்த் நிம்பல்கர்,  விமானப்படை விமான ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மும்பை அழைத்து  செல்லப்பட்டார். தொடர்ந்து, சில்சார் எஸ்.பி அலுவலகத்திற்கு சென்ற முதல்வர், அங்கு வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த போலீசாரின் உடலுக்கு  மலர் அஞ்சலி செலுத்தினார். மேலும், பதற்றமான சூழல் நிலவும் எல்லைக்கு சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், மிசோரமின் 3 மாவட்ட எல்லையிலும் 3 ஆயிரம் கமாண்டோ வீரர்களை நிறுத்த, அசாம் அரசு முடிவு செய்துள்ளது. மேலும், அசாம் மாநில கபுகஞ்ச் மற்றும் தோலை பகுதி மக்கள் நேற்று காலை 9  மணி முதல் மிசோரத்திற்கு செல்லும் சாலைகளை முடக்கி உள்ளனர்.

இதேபோல், எல்லை பிரச்னையை தீர்க்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எல்லை நகரங்கள் மற்றும் கிராமங்களை சேர்ந்த மக்களும்  இன்று முதல், மிசோரமுக்கு எதிராக காலவரையற்ற பொருளாதார முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர்.  லைலாபூரில் இன்று 12 மணி நேர பராக் பள்ளத்தாக்கு பந்த்துக்கு பராக் ஜனநாயக  முன்னணி (பி.டி.எப்) அழைப்பு விடுத்துள்ளது.

மிசோரம் போலீஸ் மீது வழக்கு

அசாம் சிறப்பு டிஜிபி ஜி பி சிங் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்கள் தியாக சகாக்களின் குடும்பங்களுக்கு உதவ நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம். காயமடைந்தவர்கள் முழுமையாக கவனிக்கப்படுவார்கள். தாக்குதல் நடத்தியவர்கள் மீது அசாமின் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அசாம் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மிசோரம் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்’’ என கூறி உள்ளார்.

எல்லையில் நடந்தது என்ன?...அசாம் அரசு விளக்கம்

அசாம் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அசாமில் ரெங்டி பாஸ்தி நோக்கி மிசோரம் சாலை அமைப்பது தொடர்பாகவும், லைலாபூரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விதிகளை மீறியது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த ஐ.ஜி., டி.ஐ.ஜி, கச்சார் டி.சி, எஸ்.பி. மற்றும் கச்சார் மண்டல வனத்துறை அதிகாரி உள்ளிட்ட  அதிகாரிகள் குழு சென்றது. அதே நேரத்தில், மிசோரம் சிஆர்பிஎப் முகாமுக்கு அடுத்து ஒரு புதிய ஆயுத முகாமை அமைத்தது. மிசோரமில்  இருந்து ஒரு கும்பல் கல் வீசத் தொடங்கியது. இதில், மாவட்ட ஆட்சியரின் கார் உட்பட 3 வாகனங்கள் சேதமடைந்தன. எஸ்.பி., கோலாசிப் அசாம் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி  வந்தபோதும், மிசோரம் காவல்துறை, அசாம் அதிகாரிகள், பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது’’ என கூறி உள்ளது.

Related Stories:

>