பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு கர்நாடகா முதல்வர் பசவராஜ்: இன்று காலை 11 மணிக்கு பதவியேற்கிறார்

பெங்களூரு: கர்நாடக  மாநில முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்ற நாள் முதல், சில பாஜ மூத்த எம்எல்ஏக்கள் அவருக்கு எதிராக போர்கொடி உயர்த்தி வந்தனர். அதற்கு பணிந்த பாஜ மேலிடம், வயதை காரணம் காட்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் படி எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுத்தது. கட்சி தலைமையின் உத்தரவுக்கு மதிப்பு கொடுத்து தனது முதல்வர் பதவியை எடியூரப்பா நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிய முதல்வர் தேர்வு செய்வது தொடர்பாக கர்நாடக பாஜ மேலிட பொறுப்பாளர் அருண்சிங் மற்றும் மேலிட பார்வையாளர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷண்ரெட்டி, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்தனர்.

அவர்கள் முன்னிலையில் பெங்களூரு ஆளுநர் மாளிகை அருகில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இரவு 7.30 மணிக்கு பாஜ எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 95 சதவீதம் எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர்.  இதில் உள்துறை அமைச்சராக பதவி வகித்த பசவராஜ்பொம்மையை புதிய பாஜ சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யும் படி பாஜ மேலிடம் கூறியுள்ள தகவலை மேலிட பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து பசவராஜ்பொம்மை பெயரை எடியூரப்பா முன்மொழிந்தார். அதற்கு கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் கை தட்டி வரவேற்பு ஆதரவு ெகாடுத்தனர். அதை தொடர்ந்து சட்டமன்ற கட்சி தலைவராக பசவராஜ்பொம்மை தேர்வு செய்யப்பட்டதை அதிகாரபூர்வமாக தலைவர்கள் அறிவித்தனர்.

இதை தொடர்ந்து, கட்சி தலைவர்களுடன் ஆளுநர் மாளிகை சென்ற பொம்மை, ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கும்படி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் ெகாடுத்தார். அதை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இன்று காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடக்கிறது.

எடியூரப்பா ஆதரவாளர்

ஆட்சி தலைமை மாற்றம் ஏற்பட வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி   உயர்த்தியவர்களில் பலர் லிங்காயத்து வகுப்பை சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர் பதவி விலகியபின், அதே வகுப்பை சேர்ந்த முருகேஷ் நிரானி, அரவிந்த்  பெல்லத், பசனகவுடா பாட்டீல் யத்னால் ஆகியோர் முதல்வர் பதவிக்கு   முயற்சித்தனர். ஆனால் தனது ஆதரவாளராக பசவராஜ்பொம்மையை முதல்வராக்கியதின் மூலம் எடியூரப்பா தனக்கான அரசியல் பலத்தை எதிரிகளுக்கு காட்டியுள்ளார். அவரின் நிழல் முதல்வராக பொம்மை செயல்படுவார் என்பதில் மாற்று கருத்தில்லை.

Related Stories: