இலை கட்சி மாஜி மந்திரிக்கு சாதகமாக ரிப்போர்ட் அனுப்பிய கதையின் பின்னணியை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மர்மம்.. மர்மம்... ஒரே மர்ம நாவலாக மாறி இருக்கும் ஒரு விஷயத்தை சொல்லுங்க...’’ என திகிலுடன் கேட்டார் பீட்டர் மாமா.

‘‘ஹனிபீ மாவட்டத்தின் இரண்டெழுத்து தொகுதி எம்எல்ஏவான ‘துணையானவரின்’ உதவியாளர்களாக பலர் கடந்த ஆட்சியின்போது இருந்தனர். இவ்வரிசையில் ‘முருகப்பெருமான்’ பெயர் கொண்டவர், தொகுதி ஊரிலிருந்து வெளியூர் செல்லும்போது விபத்தில் சிக்கி இறந்தார். தொகுதி அலுவலகத்தில் உதவியாளராக இருந்த ‘டோக்கியோ’ நாட்டை நினைவூட்டுபவர், இரவு மது அருந்தி உறங்கப்போனவர் காலையில் இறந்தார். இதேபோல், துணையானவர் மகனின் பள்ளித்தோழரான ‘மூன்றெழுத்து காரர்’, பெரியகுளத்தில் இருந்து தேனிக்கு வந்தபோது விபத்தில் சிக்கி பலியானார். இந்த மூவர் சமீபத்தில் அடுத்தடுத்து இறந்தது, இவர்களது உறவினர்களுக்கு பெருத்த சந்தேகத்தைத் தந்திருக்கிறதாம். இவர்கள் பெயர்களில் நிறைய சொத்துகள் வாங்கிக் குவித்திருப்பதாகவும் தெரிகிறது. இதற்கெல்லாம் உச்சமாக, துணையானவரின் சென்னை அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக பல ஆண்டுகள் இருந்து வரும் இன்னொரு மூன்றெழுத்துக்காரர், தற்போது திடீரென காணாமல் போய், இவர் குறித்த எந்த விபரமும் தெரியவில்லையாம். துணையானவரின் உதவியாளர்கள் குறித்த சந்தேகங்கள் வேகமடைந்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில், ‘என்ன நடந்தது?’ என்கிற கேள்விகளோடு மர்ம கதை நாவல்களை விட ரொம்பவே விறுவிறுப்பாக இருக்கிறது என்று அக்கட்சியை சேர்ந்தவர்களே பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பழைய கதையை சொல்லி, பணம் குவிக்கும் இலை கட்சி நிர்வாகிகளின் அட்டகாசம் குறையவில்லை போலிருக்கே...’’என்று சிரித்தபடி சொன்னார் பீட்டர் மாமா.

‘‘தூங்கா நகர் மாவட்டத்தில் மட்டுமே 250க்கும் அதிக டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. இங்கு விற்பனை குறைந்த கடைகளைக் குறிவைத்து இலைக்கட்சியினரில் சிலர், விஷமப்பிரசாரம் செய்து, வருவாய் பார்த்து வருகின்றனராம். பணியாளர்களை அணுகும் இவர்கள், கடந்த காலத்து அதிகாரிகள் டாஸ்மாக் நிர்வாகத்தில் இன்னும் இருப்பதால், சரக்கு அதிகம் விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளை பெற்று தருகிறோம். அதிக மது விற்பனை என்றால், அதிக வருவாய் பார்க்கலாம். விற்பனை சரிவென்றால் பணிமாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் வந்து சேரும் என்றெல்லாம் கூறி, கடும் வசூலில் களம் இறங்கி இருக்கின்றனராம். ஒருவேளை பழைய ஆட்களின் ‘பவர்’ மூலம் பலன் கிடைக்கலாம் என்பதால் இவர்களிடம் ஒரு தொகையையும் பலர் இழந்திருக்கின்றனர். விதிமுறைகள் மீறி செயல்பட்டு வருவாய் பார்த்து மோசடி செய்கிறார்களாம் இலைக்கட்சியினர். இவர்களுக்கு டாஸ்மாக் பணியாளர்கள் கடுமையான கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இதனை டாஸ்மாக் இயக்குனர் அலுவலகம் கண்டறிந்து, விதி மீறி செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பணியாளர்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்குதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வறுமை ஒழிக்கும் அலுவலகமே, வறுமையில் இருப்பது வளர்ச்சியை பாதிக்காதா... அப்பாவியாக கேட்டார் பீட்டர் மாமா.

‘‘ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசின் பல்வேறு வறுமை ஒழிப்புத்திட்டங்களை மாவட்ட அளவில் செயல்படுத்துவதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முதன்மையான அலுவலகமாக உள்ளது. இதன் நிர்வாக செலவீனம் ஒன்றிய, மாநில அரசுகளால், 75:25 என்ற விகிதத்தில் பிரித்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கிராமங்களின் வறுமை மற்றும் பிற்பட்ட நிலையை நீக்குவதற்கு அதன் கட்டமைப்புகளை பலப்படுத்துவதிலும், பொருளாதார வளங்களை மேம்படுத்துவதிலும் உதவி செய்கிறது. 1980ம் வருடத்திய தமிழ்நாடு அரசின் சங்கங்கள் சட்டப்படி ஊரக வளர்ச்சி முகமை தொடங்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதிலும் மற்றும் அதன் செயல்பாட்டையும் நிர்வகிக்கவும் உள்ள நிர்வாகக்குழு, இதனை கட்டுபடுத்தி மேற்பார்வையிடும் பணியினையும் செய்கிறது. தற்போது வறுமையில் சிக்கி தவிப்பதுடன், மாவட்டம் தோறும் கடனில் சிக்கி தவிக்கிறது. இதனால் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்ற தொகையை இந்த அமைப்பில் பணியாற்றுகின்ற பணியாளர்கள் சம்பளமாக மாற்றிக்கொள்ள வேண்டிய சூழல் இருந்து வருகிறது. ஒன்றிய அரசிடம் இருந்து வர வேண்டிய 75 சதவீத நிதி வராததால் குமரி மாவட்டத்தில் மட்டும் ரூ.1.50 கோடி அளவில் இந்த அமைப்புக்கு கடன் இருக்கிறதாம்... இதற்கு இலை ஆட்சியின் மெத்தன நிர்வாக நடவடிக்கையே காரணம் என்று பேசிக்கொள்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைகட்சி ஆர்ப்பாட்டத்தை அப்படியே ‘லைவ்’வாக சொல்லுங்க கேட்போம்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘விழுமியமான புரத்தில் மாஜி மந்திரியானவர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு, கூட்டம் சேராதன்னு, பக்கத்து மாவட்டமான ‘கள்’ என்று தொடங்கும் மாவட்டத்தையும் அழைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினாராம். ரெண்டு மாவட்டமும் சேர்ந்த 2 ஆயிரம் இலைக் கட்சி ெதாண்டர்கள் கூட வரவில்லையாம். ஆனால், காக்கிகளோ, 2 மடங்கு கூட்டத்தை குறிப்பிட்டு வழக்குபோட்டிருக்காங்களாம். இலைகட்சி அமைச்சரின் விசுவாசிகள் பலர் இன்னமும் காக்கிதுறையில் இருந்துகொண்டு வேலை செய்வதால், அவர்கள் அளித்த ரிப்போர்ட்டின்படி 4 ஆயிரம் பேர் கூடியதாக காவல்நிலையத்தில் வழக்கு போட்டிருக்காங்களாம். தனிப்பிரிவோ, 2 ஆயிரம்பேருன்னு போட்டிருக்காம். இன்னொரு பிரிவு காக்கிகள், இருமடங்கா ரிப்போர்ட் கொடுத்து வழக்கு போடச் சொல்லியிருக்காங்களாம். அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை,  மிகைப்படுத்திபோட்டு அவர்களை குஷிபடுத்தி, பெரிய அமவுண்ட்டையும் தேத்திட்டாங்களாம். இலைகட்சிக்கு ஆதரவாக செயல்படும் காக்கிகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

Related Stories: