போலீஸ் காவலில் விசாரணை முடிந்தது ராஜ் குந்த்ரா சிறையில் அடைப்பு

மும்பை: பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, ஆபாச படங்களை உருவாக்கி அதனை ஹாட்ஷாட் மொபைல் ஆப்ஸ் மூலம் வெளியிட்ட புகாரின் பேரில் மும்பை காவல் துறையால் கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸ் காவலில் விசாரிக்க நேற்று வரை அனுமதி வழங்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், மும்பை மாஜிஸ்திரேட்  கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி குந்த்ரா தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால், அவருக்கு ஜாமீன் வழங்க  நீதிபதி மறுத்தார்.

மேலும், இந்த மனுவுக்கு  போலீசார் வரும் 29ம் தேதி பதில் அளிக்கவும், குந்த்ராவை  14 நாட்கள் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு,  ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் குந்த்ரா அடைக்கப்பட்டார். இதுபோல், அவரது நிறுவன பங்குதாரரான ரையான் தோர்ப்பேயையும் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கதறி அழுத ஷில்பா

ஆபாச பட விவகாரம் தொடர்பாக குந்த்ராவை கைது செய்த பிறகு, அவருடன் ஷில்பா ஷெட்டி வீட்டுக்கு சென்ற போலீசார் அங்கு சோதனை நடத்தினர். ஷில்பாவிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அப்போது, ஷில்பா கதறி அழுததாகவும், பின்னர், தனது கணவர் குந்த்ராவை பார்த்து, ‘உங்களால் எனது குடும்பத்தின் நற்பெயர் பாழாகி விட்டது என கூறி வாக்குவாதம் செய்துள்ளார். பட வாய்ப்புகள் போனதால் நிதி இழப்பு ஏற்பட்டது குறித்தும் அவர் தெரிவித்தார் என போலீசார் கூறினர்.

Related Stories: