×

வேறொருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு வீடு புகுந்து காதலியின் தந்தை, தாய், சகோதரிக்கு சரமாரி கத்திக்குத்து: காதலன் வெறிச்செயல்

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கூடல் நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (70). நேதாஜி சிலை சந்திப்பு அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி சந்திரகலா (65). இவர்களுக்கு ரேகா மற்றும் பட்டதாரிகளான கவுரி (24), 23 வயதில் மற்றொரு பெண் என 3 மகள்கள் உள்ளனர். ரேகா திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். மற்ற இருவருக்கும் திருமணமாகவில்லை. இவர்களில் பட்டதாரியான 3-வது மகளுக்கு குடியாத்தம் பவளக்கார தெருவைச் சேர்ந்த முகேஷ் (26) என்பவருடன் 2  ஆண்டாக காதல் இருந்து வந்துள்ளது. பின்னர் பிரிந்துவிட்டனர். இதனால், வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர்
ஏற்பாடு செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை காதலியின் வீட்டிற்கு சென்ற முகேஷ், தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த முகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்திரசேகரனை குத்தினார். இதனை தடுக்க முயன்ற மனைவி சந்திரகலாவுக்கும், மகள் கவுரிக்கும் கத்திக்குத்து விழுந்தது. இவர்களின் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர்ஓடி வந்தனர்.

இதைப்பார்த்ததும் தப்பி ஓட முகேஷ் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அப்போது அங்கிருந்த மின்வயரில் உரசியதால் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். கீழே குதித்ததிலும் தலையில் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த 4 பேரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டனர். முகேஷை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், சந்திரசேகரன், சந்திரகலா, கவுரி 3 பேரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Marriage, house burglary, boyfriend
× RELATED கொரோனாவால் தவிக்கும் இளசுகள்:...