ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அப்துல் கலாம் நினைவிடத்தில் குடும்பத்தினர், மக்கள் அஞ்சலி

ராமேஸ்வரம்: அப்துல் கலாமின் 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் அஞ்சலி செலுத்தினர். நாட்டின் 11வது ஜனாதிபதியாக பதவி வகித்த ஏ.பி.ஜெ.அப்துல்கலாம், கடந்த 2015 ஜூலை 27ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஒன்றிய அரசின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு துறையின் சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டது.

கலாம் இறந்து நேற்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதையொட்டி அஞ்சலி செலுத்தும் வகையில், நினைவிட மைய மண்டபத்தில் அமைந்துள்ள கலாமின் சமாதிக்கு பச்சை நிற பட்டுத்துணி போர்த்தி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து கலாமின் மூத்த சகோதரர் மகன் ஜெயினுலாபுதீன், மகள் நசீமா மரைக்காயர் தலைமையில் குடும்பத்தினர், நினைவிடத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தி, மலர்கள் தூவி, அஞ்சலி செலுத்தினர். கலாமின் பேரன்கள் ஷேக்சலீம், ஷேக்தாவூத், ராமேஸ்வரம் முஸ்லீம் ஜமாத் தலைவர் அப்துல்ஹமீது உட்பட உறவினர்கள் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம், கலெக்டர் சந்திரகலா, காவல்துறை டிஐஜி மயில்வாகனன், உள்ளிட்ட பலர், கலாமின் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  பல்வேறு அமைப்பினரால் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நேற்று காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: