போலி பத்திரம் எழுதும் ஆவண எழுத்தர்களின் உரிமம் ரத்து: அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

சென்னை: போலி பத்திரம் எழுதும் ஆவண எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை சாந்தோம் அலுவலகத்தில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில், அமைச்சர் மூர்த்தி தலைமையில் தணிக்கை மாவட்ட பதிவாளர்கள் உடனான ஆய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, தலைவர் சிவன் அருள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் முறையாக பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதா, எந்தெந்த அலுவலகங்களில் பத்திரங்கள் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது, கடந்த காலங்களில் என்னென்ன தவறுகள் நடந்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டோம். அதேநேரத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் தவறான பத்திரங்களை எழுதி பதிவு செய்யக்கூடிய ஆவண எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

பதிவுப்பணியில் உள்ள குறைபாடு தொடர்பாக பொதுமக்கள் புகார் செய்த ஒரு மணி நேரத்திற்குள், அந்த புகார் சரியானதாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தீர்வு கண்டுள்ளனர். பதிவுத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள புகார் மையத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. அதில் முறையான 2,500 புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. ஆவணங்களை பொறுத்தவரையில் பதிவு செய்த அன்றைக்கே திருப்பி தர வேண்டும். கட்டிட களப்பணி செய்வதாக இருந்தால் 5 தினங்களுக்கு முடித்து பத்திரத்தை திருப்பி தர வேண்டும். சரியாக இருக்கக்கூடிய பதிவுக்கு அன்றைய தினமே பட்டாமாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவுத்துறையில் இல்லாத அளவில் கடந்த வாரத்தில் ஒரே நாளில் ரூ.134 கோடி வரை வசூலாகியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: