விரைவு, மாநகர் உள்பட 8 போக்குவரத்து கழக பஸ்களுக்கு 34 ஆயிரம் டயர்கள் வாங்கும் பணிகள் தீவிரம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: மாநகர் போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட 8 போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களுக்காக 34 ஆயிரம் புதிய டயர்களை கொள்முதல் செய்யும் பணியில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் மாநகர் போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம் போக்குவரத்து கழகம், சேலம் போக்குவரத்து கழகம், கோவை போக்குவரத்து கழகம், கும்பகோணம் போக்குவரத்து கழகம், மதுரை போக்குவரத்து கழகம், திருநெல்வேலி போக்குவரத்து கழகம் என 8 போக்குவரத்து கழகங்கள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களை லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதிவியேற்ற பிறகு, போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தும் வகையிலும், அதில் பயணிக்கும் பொதுமக்களின் நலனுக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில், முக்கியமானதாக மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் அவர்கள் கட்டணம் செலுத்தாமல் பயணித்து வருகின்றனர். குறிப்பாக, தினசரி வேலைக்கு செல்லும் பெண்கள் மத்தியில் இத்திட்டம் மிகுந்த வரவேற்பு பெற்றிருக்கிறது. இதேபோல், அனைத்து போக்குவரத்து கழகங்களும் தரமான சேவையினை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும், முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், தலைமை வகித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘அரசு பேருந்துகளின் பராமரிப்பினை மேம்படுத்திட வேண்டும். தடங்களை மறுஆய்வு செய்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவை மற்றும் வசதியினை மேம்படுத்திட வேண்டும். சுற்றுச்சூழல் மாசினை குறைத்திடும் வகையில், டீசலுக்கு பதிலாக மாற்று எரிசக்தி மூலம் அதாவது மின்கலன், இயற்கை எரிவாயு மற்றும் திரவ இயற்கை எரிவாயு மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை இயக்குவது, எண்ணெய் நிறுவனங்கள் மூலமாக போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை மையங்கள் அமைப்பது, அனைத்து அரசு போக்குவரத்து கழக கட்டிடங்களின் மேற்கூரைகளில் சூரியமின் தகடுகளை அமைத்து, மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும்’ என அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.

இதனையடுத்து சம்மந்தப்பட்ட பணிகளில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் 8 அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில், பழுதடைந்து இருக்கும் பழைய டயர்களை நீக்கிவிட்டு, புதிய டயர்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.60 கோடி செலவில், 34 ஆயிரம் புதிய டயர்களை வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளில், போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

* புதிய டயர்கள் கொள்முதல்

போக்குவரத்து கழகம்    ரேடியல்

ரிப் பேட்டர்ன் டயர்    டியூப்லெஸ் டயர்    மினிபஸ் டயர்

எம்டிசி    3441    90    300

எஸ்இடிசி    1080    2040    -

விழுப்புரம்    5748    492    -

சேலம்     4260    120    -

கோவை    4620    96    -

கும்பகோணம்    5717    104    24

மதுரை    3048    480    -

திருநெல்வேலி    3108    144     -

மொத்தம்    31022    3566    324

Related Stories:

>